இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்றபோது சர்வதேச சட்டம் மற்றும் ஜெனிவா ஒப்பந்தத்தில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலை நிகழ்த்தியவர்கள் அனைவர் மீதும் சர்வதேச விசாரணை நடத்தும் வகையிலான வலுவான தீர்மானத்தினை இந்தியாவே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு முன்பு அமெரிக்கா உள்பட மற்ற நாடுகளுடன் இணைந்து கொண்டு வர வேண்டும் என்றும், அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவான நிலையை எடுத்தால், அதனை மாற்ற ராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தின்படி நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
“இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது தாங்கள் அறிந்ததே. தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் மனித உரிமை ஆணையர் இது தொடர்பாக விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக 1-10-2015 மற்றும் 2-10-2015 ஆகிய நாட்களில் விவாதம் நடத்தப்பட உள்ளது.
இந்த சூழ்நிலையில், இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தக்கோரி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா வலுவான தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில் மத்திய அரசு உடனடியாக நடவடிகை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பட்டுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக