புதன், 5 பிப்ரவரி, 2014

தண்டனையை ரத்து செய்யக் கோருவதற்கு "காங்கிரஸ் " மத்திய அரசு எதிர்ப்பு Congress Oppose



முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் கருணை மனு மீது முடிவெடுக்க தாமதம் ஏற்பட்டதைக் காரணம் காட்டி தண்டனையை ரத்து செய்யக் கோருவதற்கு "காங்கிரஸ்

 " மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பான வழக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
சமீபத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 15 பேர்களுக்கு, அவர்களது கருணை மனு மீது அரசு முடிவெடுக்க கால தாமதம் ஏற்பட்டதைக் காரணம் காட்டி, உச்ச நீதிமன்றம் , அவர்களுக்கு விதிக்கபட்டிருந்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்திருந்தது.
இதையடுத்து, ராஜிவ் காந்தி கொலைவழக்கில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட முருகன் , சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்றவேண்டும் என்று மனு போடப்பட்டது.
அவர்கள் கருணை மனு மீது முடிவெடுக்க இந்திய அரசு சுமார் 11 ஆண்டுகள் காலம் எடுத்துக்கொண்டதால், அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலைக் காரணம் காட்டி இந்த மனு போடப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையில், அவர்களுக்காக வழக்கறிஞர்கள் ராம் ஜேத்மலானி மற்றும் யோக்முக் சௌத்ரி ஆகியோர் வாதாடினர்.
இன்று மத்திய அரசு தரப்பில் தனது வாதங்களை முன்வைத்த அரசு வழக்குரைஞர், வாகன்வதி, ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற இது போன்ற கருணை மனுக்கள் மீதான வழக்குகளில் முடிவினை எடுக்க காலதாமதம் ஏற்பட்டதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது, ஆனால் இந்த வழக்கில் இறுதி முடிவினை எடுக்க தாமதம் ஏற்பட்டதற்கான காரணத்திற்கு மத்திய அரசால் விளக்கம் அளிக்க இயலும் என்பதால் மரண தண்டனையை ரத்து செய்ய கோருவதை ஏற்க முடியாது என்றார்.
அதைபோல் மற்ற வழக்குகள் போல் இல்லாமல் இது தேசத்திற்கு துரோகம் விளைவிக்க கூடிய பயங்கரவாத செயல் என்பதாலும் இந்த கோரிக்கையை ஏற்கக்கூடாது என்றார் அவர்.
இதனையடுத்து இந்த வழக்கிற்கான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: