ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

Srilanka - IPKF - LTTE- Natwar Singh இலங்கைப் பிரச்சினையை இந்தியா மோசமாகக் கையாண்டது: நட்வர் சிங்


 

சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங்கின் சுயசரிதை, இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நட்வர் சிங்
நீண்ட காலம் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியாகப் பணியாற்றிவிட்டு, அதன் பின் தீவிர அரசியலிலும் ஈடுபட்டிருந்த நட்வர் சிங்கின் ஒன் லைஃப் இஸ் நாட் இனஃப் என்ற இந்தப் புத்தகத்தில் காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி பற்றி அவர் தெரிவித்திருந்த கருத்துகள் இந்திய ஊடகங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின.
இந்த நூலில், ராஜீவ் காந்தியின் காலகட்டத்தில் இலங்கை இனப் பிரச்சனை எப்படி கையாளப்பட்டது என்பது குறித்தும் சில தகவல்களையும் கருத்துக்களையும் கூறியிருக்கிறார் நட்வர் சிங். 1987ல் கையெழுத்தான இந்திய – இலங்கை ஒப்பந்ததின் பின்னணி குறித்தும் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.
இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பாக, பிரதமர் ராஜீவ் காந்தி தில்லி அசோகா ஹோட்டலில் தங்கியிருந்த புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்ததாகக் கூறுகிறார் நட்வர் சிங். சந்திப்பிற்குப் பிறகு, பிரபாகரனிடமிருந்து எழுத்து மூலமாக உத்தரவாதம் வாங்கினீர்களா என்று தான் ராஜீவ் காந்தியிடம் கேட்டதாகவும் ராஜீவ் அதைக் கேட்டு எரிச்சலடைந்த்தாகவும் தெரிவிக்கிறார் நட்வர் சிங்.
பிரபாகரன் வாக்குக் கொடுத்திருக்கிறார் என ராஜீவ் கூறியதாகவும் பிரபாகரனிடம் எழுத்துமூலமாக உத்தரவாதம் பெற்றிருக்க வேண்டுமெனத் தான் வற்புறுத்தியதாகவும் நட்வர் சிங் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, இலங்கையில் சட்டம் - ஒழுங்கு நிலை மிகவும் மோசமடைந்து கொண்டிருப்பதால் இந்தியா உடனடியாக தனது படைகளை அனுப்பாவிட்டால், அன்று இரவே கூட ஆட்சிக் கவிழ்ப்பு நடக்கலாம் என தான் அஞ்சுவதாகவும் ராஜீவிடம் ஜெயவர்தனே கூறியதாகவும் இதைப் பற்றி மூத்த அமைச்சரவை சகாக்களிடம் விவாதிக்க வேண்டும் என்று தான் கூறியபோது, அதற்கு முன்பே இந்தியப் படைகளை வரச்சொல்லிவிட்டதாக ராஜீவ் தெரிவித்ததாகவும் நட்வர் சிங் கூறியுள்ளார்.
இந்திய வற்புறுத்தலின் மூலமாகத்தான் புலிகளை இந்திய–இலங்கை ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளச்செய்தது என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில், இந்தியா இந்த ஒப்பந்தத்திற்காக புலிகளுக்குப் பணம் கொடுத்ததாக 1988 ஏப்ரலில் லண்டன் அப்சர்வர் பத்திரிகையில் ஒரு இந்தியச் செய்தியாளர் மூலம் வெளிவந்த தகவலைக் குறிப்பிட்டிருக்கிறார் நட்வர்.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளப் புத்தகம்
ஆனால், புலிகள் ராணுவப் பாதையிலிருந்து ஜனநாயகப் பாதைக்குத் திரும்பும் முயற்சிகளுக்கு உதவவே அவர்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டதாக தான் நாடாளுமன்றத்தில் பிறகு தெரிவித்ததாகவும் நட்வர் சிங் கூறியுள்ளார். ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெறுவதற்கு முன்பாகவே புலிகள் முதல் தவணை பணத்தைப் பெற்றுக்கொண்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.
துவக்கத்திலிருந்தே, இலங்கை இனப் பிரச்சனை மிக மோசமாக இந்தியாவால் கையாளப்பட்டது என்றும் முடிவில் தோல்வியே கிடைத்தது என்றும் நட்வர் சிங் குறிப்பிட்டுள்ளார்.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியுடனான தனது அனுபவங்கள், சோவியத்தின் வீழ்ச்சி, சோனியா காந்தி தலைமையில் பணியாற்றிய அனுபவம், எண்ணைக்கு உணவு திட்டத்தில் நடந்தது என்ன என பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார் நட்வர் சிங்.

கருத்துகள் இல்லை: