புதன், 3 டிசம்பர், 2014

ம.தி.மு.க.வை முடிந்தால் தடை செய்து பாருங்கள்: வைகோ சவால்

ம.தி.மு.க.வை முடிந்தால் தடை செய்து பாருங்கள் என்று சுப்பிரமணியன் சுவாமிக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சவால் விடுத்துள்ளார்.கோவையில் அவ்ர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது:-

பா.ஜ.க. அகில இந்திய தேசிய செயலாளர்களில் ஒருவரான ஹெச்.ராஜா, ‘வைகோ நாவை அடக்க வேண்டும். இல்லாவிட்டால் பாதுகாப்பாக வீடு திரும்ப முடியாது என பேசி இருக்கிறார். கோபமடைந்த ம.தி.மு.க.வினரை வன்முறையில் ஈடுபடக்கூடாது என தெரிவித்திருக்கிறேன். எதிர்த்து போராட்டம் நடத்தவும் ஒரு தகுதி வேண்டும். ஹெச்.ராஜா அதற்கெல்லாம் தகுதி இல்லாதவர். ஹெச்.ராஜாவின் இந்த செயலுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் கண்டித்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியசுவாமி எனக்கு டுவிட்டரில் ஒரு செய்தி அனுப்பி இருக்கிறார். அதில், ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறு. இல்லாவிட்டால் தூக்கி எரியப்படுவாய் என்றும், ம.தி.மு.க. தொண்டர்களை கைது செய்ய வேண்டும். இலலாவிட்டால் ஜெயலலிதா ஜாமீன் மனுவை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தை நாடுவேன் என்றும், ம.தி.மு.க.வை தடை செய்வேன் என்றும் சொல்கிறார்  இதற்கும், ஜெயலலிதா வழக்குக்கும் என்ன தொடர்பு?. சுப்பிரமணிய சுவாமியின் இந்த பேச்சை பிரதமர் மோடி அங்கீகரிக்கிறாரா? நான் தெருவில் நடமாட முடியாது என என்னை மிரட்டியதை இப்போது வரை கண்டித்தீர்களா? முடிந்தால் ம.தி.மு.க.வை தடை செய்து பாருங்கள்.

ராஜீவ்காந்தி, சோனியா, மன்மோகன்சிங்கை என்னை போல யாரும் விமர்சித்ததில்லை. எம்.ஜி.ஆர்., கருணாநிதி போன்றோரை கடுமையாக விமர்சித்திருக்கிறேன். ஆனால் காங்கிரஸ், அ.தி.மு.க. தி.மு.க.வின் நிர்வாகிகளோ, தொண்டர்களோ யாரும் என்னை மிரட்டவில்லை.புலிகளின் ஆதரவாளன் என தெரிந்துதான் வாஜ்பாயும், அத்வானியும் என்னை கூட்டணியில் வைத்திருந்தார்கள்.

ஆனால், வாஜ்பாயின் ஆட்சியை கவிழ்த்தவர் சுப்பிரமணியசுவாமி. சுப்பிரமணிய சுவாமி ராஜபக்சேவின் ஏஜெண்ட் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: