சனி, 10 ஜனவரி, 2015

DMK Leader தி.மு.க. தலைவராக கருணாநிதி 11-வது முறையாக தேர்வு

 தி.மு.க. தலைவராக கருணாநிதி 11-வது முறையாக தேர்வு

கனிமொழி எம்.பி. மகளிரணி செயலாளர் ஆனார்

சென்னை, ஜன.10-

தி.மு.க. தலைவர் பதவிக்கு 11-வது முறையாக கருணாநிதி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல், பொதுச் செயலாளராக க.அன்பழகனும், பொருளாளராக மு.க.ஸ்டாலினும், மகளிரணி செயலாளராக கனிமொழி எம்.பி.யும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பொதுக்குழு கூட்டம்

தி.மு.க.வில் 14-வது உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு, மாநில நிர்வாகிகளை தவிர, மாவட்ட, ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை நடைபெற்றது.

பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, காலை 9.35 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வந்தார். பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்பட மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு - செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 1500 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தலைவர் பதவிக்கு தேர்தல்

கூட்டம் தொடங்கியதும், தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சற்குணபாண்டியன் நியமிக்கப்பட்டிருந்தார்.

தேர்தல் தொடங்கியபோது, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கீழே அமர்ந்திருந்தனர். தேர்தலை நடத்திய சற்குணபாண்டியன், ‘‘தி.மு.க. தலைவர் பதவிக்கு கருணாநிதி மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவை 603 பேர் முன்மொழிந்தும், வழிமொழிந்தும் உள்ளனர். கருணாநிதியை தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, போட்டியின்றி தி.மு.க. தலைவராக கருணாநிதி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று அறிவித்தார்.

மேடையில் கருணாநிதி

இதனைத் தொடர்ந்து, பொதுக்குழுவில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அதன்பின்னர், கருணாநிதி மேடைக்கு வந்தார். அதனைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் பதவிக் கும், பொருளாளர் பதவிக்குமான தேர்தல் நடந்தது.

பொதுச் செயலாளர் பதவிக்கு க.அன்பழகன் பெயரிலும், பொருளாளர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் பெயரிலும் மட்டுமே மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்ததால், அவர்கள் இருவரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, க.அன்பழகன், மு.க.ஸ்டாலின் ஆகியோர் மேடைக்கு வந்தனர்.

சட்ட திருத்த தீர்மானம்

தொடர்ந்து, தணிக்கை குழு உறுப்பினர்களாக காசிநாதன், குழந்தைவேலு, பலராமன், சுப.சீதாராமன் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பின்னர், கருணாநிதி, க.அன்பழகன், மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு ஆளுயர மாலைகள் அணிவிக்கப்பட்டன.

தி.மு.க. தலைவராக தொடர்ந்து 11-வது முறையாக கருணாநிதியும், பொதுச்செயலாளராக 9-வது முறையாக க.அன்பழகனும், பொருளாளராக 2-வது முறையாக மு.க.ஸ்டாலினும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், பொருளாளர் மு.க.ஸ்டாலின் 3 சட்ட திருத்த தீர்மானத்தை கொண்டுவந்து பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலை பெற்றார். அதன்பிறகு, கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகளை தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:-

புதிய நிர்வாகிகள் யார்?

முதன்மை செயலாளர் - துரைமுருகன். துணை பொதுச் செயலாளர்கள் - சற்குண பாண்டியன், வி.பி.துரைசாமி, திண்டுக்கல் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன். கொள்கை பரப்பு செயலாளர்கள் - திருச்சி சிவா, ஆ.ராசா. மகளிர் அணி செயலாளர் - கனிமொழி எம்.பி. மாணவர் அணி செயலாளர் - இள.புகழேந்தி. தொழிலாளர் அணி செயலாளர் - சிங்கார ரத்தின சபாபதி.

இவ்வாறு அறிவித்த கருணாநிதி, ‘‘இதுதவிர பல்வேறு அணிகளின் செயலாளர்கள், இணை செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகள் பின்னர் அறிவிக்கப்பட உள்ளன’’ என்று தெரிவித்தார்.

அதன்பிறகு, பொதுக்குழு கூட்டத்தில் ஒரு சிறப்பு தீர்மானம் உள்பட 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கனிமொழி

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநில நிர்வாகிகளில், துணைப் பொதுச் செயலாளராக இருந்த துரைமுருகன் முதன்மை செயலாளர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். துணைப் பொதுச் செயலாளர்களாக ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை கட்சி பொறுப்பு வகிக்காத கனிமொழி எம்.பி.க்கு, மாநில மகளிரணி செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: