வெள்ளி, 9 ஜனவரி, 2015

Rajapakse Defeated ராஜபக்சே படுதோல்வி

ராஜபக்சே படுதோல்வி- 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மைத்ரிபால வெற்றி முகம்!


இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே படுதோல்வியைத் தழுவியுள்ளார். ராஜபக்சேவை எதிர்த்துப் போட்டியிட்ட 49 எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான மைத்ரிபால ஸ்ரீசேன சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். மைத்ரிபாலவுக்கு 52.2%; ராஜபக்சேவுக்கு 46.5% வாக்குகள் கிடைத்துள்ளன.

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. அதிபராக உள்ள மகிந்த ராஜபக்சேவும் அவரை எதிர்த்து 49 எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக மைத்ரிபால ஸ்ரீசேனவும் போட்டியிட்டனர்.

இலங்கையில் இதுவரை இல்லாத வகையில் 72% வாக்குகள் பதிவாகின. இத்தேர்தலில் பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் நடைபெறவில்லை. பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று இரவு முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக தபால் வாக்குகளும் பின்னர் மக்கள் அளித்த வாக்குகளும் எண்ணப்பட்டன. 
 
தமிழர் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மகிந்த ராஜபக்சேவுக்கு மிக மிகக் குறைவான வாக்குகளே கிடைத்தன. மைத்ரிபால ஸ்ரீசேனவுக்கு மிக அதிக அளவில் தமிழர்கள் வாக்களித்துள்ளனர். 
 
சிங்களர் வாழும் பகுதிகளிலும் கூட ராஜபக்சே தோல்வியை சந்தித்துள்ளார். அங்கும் மைத்ரிபால ஸ்ரீசேனவுக்கே அதிக வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இதனால் இலங்கையின் புதிய அதிபராக மைத்ரிபால ஸ்ரீசேன வெற்றி பெற்றுள்ளார். 
 
அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமான இல்லமான அலரி மாளிகையைவிட்டு மகிந்த ராஜபக்சே இரவோடு இரவாக வெளியேறிவிட்டார். 
 
தற்போதைய நிலையில் மைத்ரிபாலவுக்கு 52.2% வாக்குகளும் ராஜபக்சேவுக்கு 46.5% வாக்குகளும் கிடைத்துள்ளன. மொத்தமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில், 13 மாவட்டங்களில் மைத்ரிபால ஸ்ரீசேனவும், 9 மாவட்டங்களில் மகிந்த ராஜபக்சேவும் முன்னணியில் இருக்கின்றனர். 
 
தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணம் முழுவதிலும் மைத்ரிபால வென்றுள்ளார். கிழக்கு மாகாணத்தில் ஒரு இடத்தைத் தவிர அனைத்து இடங்களிலும் மைத்ரிபால வென்றுள்ளார். 
 
 இந்திய வம்சாவளித் தமிழர்கள் வாழும் மலையகத்தில் கண்டி, நுவரெலிய, பதுளை மாவட்டங்களிலும், அனுராதபுர, பொலன்னறுவ மாவட்டங்களிலும் மைத்திரிபாலவுக்கு சாதகமான முடிவுகள் வந்துள்ளன. 
 
 சிங்களர் பெரும்பான்மையினராக இருக்கும் அம்பாந்தோட்டை, மாத்தறை, மொனராகல,காலி, ரத்தினபுரியில், மகிந்த ராஜபக்சேவின் கை ஓங்கி உள்ளது.

கருத்துகள் இல்லை: