உலகத் தமிழர்களின் உணர்வுகளை அவமதிக்கும் வகையில், இந்தியாவில் எந்த பகுதியிலும் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கக்கூடாது, அவர்களை உடனே இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து கடும் கண்டனம் தெரிவித்து அவர் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:- போர்க் குற்றங்கள் செய்தவர்களை ஐ.நா சபையுடன் சேர்ந்து போர் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தியும், இலங்கையில் முகாம்களில் வாழும் தமிழர்களை அவர்களுடைய சொந்த இடங்களில் மறுகுடியமர்ப்பு செய்ய வேண்டும் என்றும், சிங்கள குடிமக்களுக்கு இணையாக தமிழர்களும் சமமான அரசியல் சட்ட உரிமைகளுடன் கெளரவமாக வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் இலங்கை அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி, 2011 ஜூன் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்த தீர்மானத்தை செயல்படுத்தாத வகையிலும், இலங்கை பாதுக்காப்பு துணை இராணுவ அதிகாரிகளுக்கு தொழிற்நுட்ப பயிற்சி அளிப்பதனாலும், மத்திய அரசு உலகெங்கும்முள்ள தமிழர்களின் உணர்வுகளை புறக்கணிப்பதாகவும், அவமரியாதை செய்வதாகவும் எண்ண வைக்கிறது.
தமிழ்நாட்டில் தாம்பரம் விமானப்படை நிலையத்தில் 9 இலங்கை விமானப்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தபோது, இந்திய அரசின் இந்த செயலை கண்டித்து, இலங்கை ராணுவ அதிகாரிகள் உடனடியாக திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று வலியுறுத்தி நான் பத்திரிகைகளுக்கு அறிக்கை வெளியிட்டேன். இலங்கைக்கு அவர்களை திருப்பி அனுப்புவதற்கு பதிலாக பெங்களூரூ, ஏலகாகெ விமானப்படை தளத்தில் இந்திய அரசு பயிற்சி அளித்து வருகிறது. மேலும், இலங்கை விமானப்படையை சேர்ந்த ஏர்வைஸ்மார்சல் ஜெகத் ஜூலங்கா ரடயஸ் மற்றும் இலங்கை கப்பல்படையை சேர்ந்த ரியர் அட்மிரல் எஸ்.ரணசிங்கே இருவரும் பல நாடுகளை சேர்ந்த 25 பயிற்சியாளர்களுடன் புதுடெல்லி தேசிய பாதுகாப்பு கல்வி கழகத்தில் பயிற்சி பெறுவதாகவும், பயிற்சியின் ஒரு பகுதியாக அவர்கள் 15.7.12 அன்று நீலகிரி மாவட்டம் கூனூருக்கு வந்திருப்பதாகவும், வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் பயிற்சி கல்லூரியை 16.5.12 அன்று பார்வையிடுவதாகவும் நான் அறிகிறேன். இந்தியாவிலுள்ள இராணுவ அதிகாரிகள் பயிற்சி நிறுவனங்களில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதும், தமிழகத்திற்கு வருகை தர அனுமதிப்பதும், தமிழக மக்களை முற்றிலும் அவமதிப்பதையே வெளிப்படுத்துகிறது.
இந்தியாவில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கும் இந்திய அரசின் மோசமான பிடிவாதமான செயல்களை கண்டு தமிழக மக்கள் விரக்தியும், கோபமும் அடைந்துள்ளனர். ஆகையினால் இந்தியாவில் எந்த ஒரு இடத்திலும், இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சியளிப்பதை நிறுத்த வேண்டும் என்றும், அவர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
----------------
Thinabhoomi
Dinamani
தினத்தந்தி
GOOGLE NEWS
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக