ஞாயிறு, 22 ஜூலை, 2012

காவிரி நதி நீர் - கர்நாடக மறுப்பு ! தமிழக அரசு - டெல்லி உச்ச நீதி மன்றத்தில் மனு




காவிரி நதி நீர் - கர்நாடக மறுப்பு !
தமிழக அரசு - டெல்லி உச்ச நீதி மன்றத்தில் மனு!



 தினகரன் :

 தமிழகத்துக்கு கர்நாடகா தண்ணீர் திறந்துவிடுவதற்காக பிரதமர் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையத்தை உடனே கூட்ட உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. 


மாவட்டங்களில் ஒரு பக்கம் பாசனத்துக்கு கைகொடுக்கும் வகையில் போதிய மழை இல்லை. இன்னொரு பக்கம், வழக்கம் போல, காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகா முரண்டு செய்கிறது. இதனால், மேட்டூரில் தண்ணீர் இல்லாத நிலை தொடர்கிறது. விளைவு, விவசாயம் பாதிக்கப்பட்டு, வறட்சி தாண்டவமாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கர்நாடகாவை கேட்டும் பலனில்லை; கர்நாடகாவை உத்தரவிட வேண்டிய காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்டச்சொன்னாலும் மத்திய அரசிடம் இருந்து பதில் இல்லை. இதனால் வேறு வழியின்றி, சுப்ரீம் கோர்ட்டை தமிழக  அரசு நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடகா தரவில்லை. கடந்த 2002ல் காவிரி நதி நீர் ஆணையம், வறட்சி காலத்தில் எந்த அளவின் அடிப்படையில் தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டும் என்ற வரன்முறைகள் வகுக்கப்பட்டன. ஆனால், அந்த விதிமுறைகளை கர்நாடக அரசு முற்றிலுமாக கடைபிடிக்கவில்லை.

இதே நிலைதான் இந்த ஆண்டும் தொடர்ந்து நீடித்து வருகிறது. காவிரியில் தண்ணீர் திறந்து விடாததால் தமிழகத்தில் உள்ள காவிரி பாசன விவசாயப் பகுதிகள் கடும் வறட்சியில் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவின்படி கடந்த ஜூன் மாதம் தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தராததால் தமிழகத்தில் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டது. இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். எனவே, காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் தமிழகத்துக்கு தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசை வலியுறுத்தும் வகையில் பிரதமர் தலைமையில் காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாக கூட்டுமாறு பிரதமருக்கு உத்தரவிட வேண்டும். மேலும், தலைக் காவிரியிலிருந்து வரும் தண்ணீரை கர்நாடக அரசு பல்வேறு தடுப்பணைகளைக் கட்டி தேக்கி வருகிறது. இதனால், தமிழகத்துக்கு வரும் தண்ணீர் தடைபடுகிறது. அந்த தடுப்பணைகளில் தண்ணீர் அதிக அளவு தேக்கப்படாமலிருந்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிக்கும். எனவே, கர்நாடக அரசு தடுப்பணைகளில் தண்ணீரைத் தேக்கிவைக்கக் கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்னும் ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை: