சனி, 11 ஆகஸ்ட், 2012

TESO டெசோ மாநாட்டுக்கு அனுமதி மறுப்பு:


TESO  :  டெசோ மாநாட்டுக்கு அனுமதி வழங்க காவல்துறை மறுத்து விட்டது. இதற்கான உத்தரவை வெள்ளிக்கிழமை நள்ளிரவு தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனிடம் போலீஸôர் அளித்தனர். 

முன்னதாக தமிழக டி.ஜி.பி. கே.ராமானுஜத்துடன் ஆணையர் திரிபாதி, கூடுதல் ஆணையர் பி.தாமரைக்கண்ணன் ஆகியோர் இரவு ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து அனுமதி மறுப்பு உத்தரவு அளிக்கப்பட்டது.

TESO  : Tamil Eelam Supporters Organisation

------------------------------------------------------------------------
டெசோ மாநாட்டுக்கு அனுமதி வழங்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. எனினும் டெசோ மாநாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  டெசோ அமைப்பு சார்பில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஆகஸ்ட் 12-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் இந்த மாநாட்டுக்கு காவல் துறையினர் அனுமதி அளிக்கக் கூடாது என்று கோரி சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எலிபி தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.  அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆர். முத்துகுமாரசாமி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நேர் எதிரே உள்ள மைதானத்தில் மாநாடு நடத்த உள்ளனர். அங்கு மாநாடு நடத்த அனுமதி அளித்தால், அதனால் எழும் சப்தத்தால் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று வாதிட்டார்.  



பொது மக்களுக்கு பாதிப்பு: தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் ஏ. நவநீதகிருஷ்ணன், பொதுப்பணித் துறை நடத்திய ஆய்வின்படி ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வெறும் 8 ஆயிரம் பேர் மட்டுமே கூட முடியும். ஆனால், சுமார் 1,250 வாகனங்களில், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் டெசோ மாநாட்டுக்கு வருவார்கள் என்று தி.மு.க. நாளேடான முரசொலியில் கூறப்பட்டுள்ளது.  மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் சூழலில், இவ்வளவு பேர் திரண்டால் அதனால் பொதுமக்களுக்கும், ராயப்பேட்டை மருத்துவமனை நோயாளிகளுக்கும் பல பாதிப்புகள் ஏற்படும். ஆகவே, மாநாட்டுக்கு காவல் துறை அனுமதி வழங்க சாத்தியமில்லை என்று குறிப்பிட்டார்.  ஒய்.எம்.சி.ஏ. நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வி.ஆர். தங்கவேல், ஒய்.எம்.சி.ஏ. மைதானம் 99 கிரவுண்ட பரப்பளவு கொண்டது. இதற்கு முன்னர் தி.மு.க., அ.தி.மு.க. உள்பட பல அரசியல் கட்சிகள் பல மாநாடுகளை இந்த மைதானத்தில் நடத்தியுள்ளனர் என்று தெரிவித்தார்.  


 உள்நோக்கமே காரணம்: டெசோ மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி. வில்சன், முதல்வர் ஜெயலலிதா நடத்தி வைத்த மெகா திருமண நிகழ்ச்சி, தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் நிகழ்ச்சி உள்பட ஏராளமான நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள், மாநாடுகள், கண்காட்சிகள் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடத்தப்பட்டுள்ளன. 

  இப்போது நடத்த உத்தேசித்துள்ள டெசோ மாநாடு பற்றிய செய்திகள் ஜூலை மாதத்திலிருந்து வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஆகஸ்ட் 12-ம் தேதி மாநாடு நடக்கவுள்ள சூழலில், ஆகஸ்ட் 7-ம் தேதிதான் மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். மாநாட்டைத் தடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் கூடிய இந்த வழக்கில், அரசு அதிகாரிகளும் மனுதாரருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர் என்று வாதிட்டார்.

கருத்துகள் இல்லை: