மாநிலங்களவைத்
தேர்தல்களில் அஇஅதிமுக சார்பாக நால்வர் போட்டியிடவிருப்பதாக தமிழக
முதல்வரும் கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று வியாழக்கிழமை
அறிவித்திருக்கிறார்.
தூத்துக்குடி மேயர் சசிகலா புஷ்பா, நெல்லை மேயர் விஜிலா சத்யானந்த், நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் முத்துக்கருப்பன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் சின்னத்துரை ஆகியோரே அஇஅதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த நால்வரும் திருநெல்வேலி மற்றும் அதன் அண்டை மாவட்டமான தூத்துக்குடியைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெயலலிதா தனது அறிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை அஇஅதிமுக ஆதரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் அறிக்கை வெளியான பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்போது பதவிக் காலம் முடிவடைந்த டி.கே.இரங்கராஜனே மீண்டும் போட்டியிடுவார் என அறிவித்திருக்கிறது.
ஐவருமே வெற்றி பெறும் அளவுக்கு சட்டமன்றத்தில் அஇஅதிமுக மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்கு போதுமான உறுப்பினர் எண்ணிக்கை இருக்கிறது.
திமுக சார்பில் அந்த கட்சியைச் சேர்ந்த திருச்சி சிவா ஏற்கெனவே மனு தாக்கல் செய்திருக்கிறார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகிக்கும் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் விஜயகாந்த் இந்த தேர்தலில் தன் கட்சியின் நிலைப்பாட்டை இன்னமும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக