வெள்ளி, 24 ஜனவரி, 2014

DMK suspends Azhagiri மு.க. அழகிரி தி.மு.க.வில் இருந்து தற்காலிக நீக்கம்




தி.மு.க.வில் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியில் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி நியமனம் செய்யப்பட்டிருந்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மத்திய மந்திரியாகவும் பொறுப்பேற்ற மு.க.அழகிரிக்கு மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஆதரவாளர்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக மு.க.அழகிரி ஆதரவாளர்களுக்கும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கும் இடையே கோஷ்டி பூசல் இருந்து வந்தது.

தி.மு.க. தலைமை இரு தரப்பினரையும் பல தடவை அழைத்து சமரசம் செய்தும், மதுரையில் ஏற்பட்ட கோஷ்டி பூசலை தீர்க்க முடியவில்லை. இந்த நிலையில் கடந்த மாதம் இந்த கோஷ்டி பூசல் பூதாகரமாக வெடித்தது. மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களும், மு.க.அழகிரி ஆதரவாளர்களும் போட்டி போட்டிக் கொண்டு பரபரப்பு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டினார்கள்.

பாராளுமன்றத்துக்கு தேர்தல் நெருங்கும் நிலையில் தென் மண்டல கோஷ்டி பூசல் நீடித்தால், அது தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்று தி.மு.க. தலைமையிடம் புகார்கள் கூறப்பட்டன. இந்த நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு மு.க.அழகிரி அளித்த பேட்டியும் விமர்சனத்துக்குள்ளானது.

இதையடுத்து மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க.வை கலைத்து தி.மு.க. மேலிடம் நடவடிக்கை எடுத்தது. அழகிரி ஆதரவாளர்கள் அனைவரும் நீக்கப்பட்டு, ஸ்டாலின் ஆதரவாளர்களைக் கொண்ட புதிய பொறுப்புக் குழுவும் அமைக்கப்பட்டது. அழகிரி ஆதரவாளர்களில் முன்னாள் துணை மேயர் மன்னன், கவுன்சிலர் முபாரக் மந்திரி, நிர்வாகிகள் பாலாஜி, எழில்மாறன், அன்பரசு, இளங்கோவன் ஆகியோர் நீக்கப்பட்டது அழகிரி ஆதரவாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகும் அழகிரி ஆதரவாளர்கள் மதுரையில் பரபரப்பு போஸ்டர்களை ஒட்டுவதை கைவிட வில்லை.

சமீபத்தில் மதுரை மாநகரிலும், புறநகரிலும் அழகிரி ஆதரவாளர்கள் நோட்டீசு ஒட்டிய போது, அதை ஸ்டாலின் ஆதரவாளர்கள் தடுத்தனர். இது மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே மோதலாக மாறியது. தங்களை சாதியைச் சொல்லி திட்டியதாக ஆண்டாள்புரம், மேலூர் போலீஸ் நிலையங்களில் அழகிரி ஆதரவாளர்கள் புகார் கொடுத்தனர். அதை ஏற்று போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வார தொடக்கத்தில் மதுரையில் அழகிரி– ஸ்டாலின் ஆதரவாளர்கள் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. இதைத் தொடர்ந்து மதுரையில் இருந்து கருணாநிதிக்கு 2500–க்கும் மேற்பட்ட புகார்கள் பேக்ஸ் மூலம் அனுப்பப்பட்டது. இது பற்றி விசாரணை நடத்திய தி.மு.க. மேலிடம் நேற்று அழகிரி ஆதரவாளர்கள் 5 பேரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து அறிவித்தது. அதன்படி அழகிரி ஆதரவாளர்களான மாவட்ட துணை செயலாளர் எம்.எல்.ராஜ் (மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் குழு தலைவர்), மதுரை மாவட்ட முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அசோக்குமார், கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மேலூர் முத்துவேல், வெள்ளையன் ஆகிய 5 பேரை கட்சியில் இருந்து சஸ்பெண்டு (தற்காலிக நீக்கம்) செய்யப்பட்டனர்.

அழகிரி ஆதரவாளர்கள் அடுத்தடுத்து நீக்கப்பட்டதால் மதுரை தி.மு.க.வில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் பாங்காங் நாட்டுக்கு சென்றிருந்த மு.க.அழகிரி இன்று (வெள்ளி) காலை சென்னை திரும்பினார். காலை 7 மணிக்கு கோபாலபுரம் சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். இருவரும் சுமார் 45 நிமிடம் பேசிக் கொண்டிருந்தனர். அதன் பிறகு தயாளு அம்மாளையும் சந்தித்து பேசிவிட்டு அழகிரி புறப்பட்டு சென்றார்.

கடந்த தடவை கருணாநிதியை சந்தித்த அழகிரி மிகவும் மகிழ்ச்சியுடன் நிருபர்களிடம் பேசி விட்டு சென்றார். எனவே இன்று அவர் கருணாநிதியை சந்தித்த போது தன் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டதை மறு பரிசீலினை செய்ய கோரிக்கை விடுத்திருப்பார் என்று கூறப்பட்டது.

அழகிரி ஆதரவாளர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படலாம் என்றும் ஒரு தரப்பினர் ஆவலுடன் இருந்தனர். ஆனால் சந்திப்பு முடிந்த அடுத்த 4 மணி நேரத்துக்குள் அழகிரியையும் தற்காலிக நீக்கம் செய்த நடவடிக்கை தகவல் வெளியானது. இன்று அழகிரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

கட்சிக்குள் ஏற்படும் அபிப்பிராயப் பேதங்கள், கோபதாபங்கள் இவை களைப் பற்றி முறையிட, கட்சிக்குள்ளேயே முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் தலைமைக் கழகத்தில் இருக்கின்ற நிலையில்; தங்கள் எண்ணங்களை வெளியிடவும், கட்சியின் கட்டுப்பாட்டைக் குலைக்காமல் காப்பாற்றவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் முறைப்படியுள்ள கழக அமைப்புகளைக் கலந்து பேசாமலும், அந்த அமைப்புகளை மதிக்காமலும், வேண்டுமென்றே திட்டமிட்டு, கழக அணியோடு கூட்டணி சேர நினைக்கின்ற கட்சிகளின் தலைமையைப் பற்றி அவதூறு கூறி கூட்டணி ஏற்படுவதைக் குலைக்க முயற்சித்தும் - திராவிட இயக்கம் தொடக்க முதல் இதுவரையில் விரும்பாததும், வெறுத்து ஒதுக்குவதுமான சாதிச் சச்சரவுகள்; இயக்கத்திற்குள் ஏற்பட்டிருப்பது போன்ற ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்கி; தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு சிலர் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் தி.மு. கழகத் தோழர்கள் சிலர் மீது பி.சி.ஆர் எனும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி, நடவடிக்கை எடுக்க, துணை போகிற துரோகச் செயலில் ஈடுபட்ட சிலர் மீதெல்லாம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு துரோகச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தும், முறையற்ற விவாதங்களில் நேரிடையாகவே ஈடுபட்டும், கழகச் செயல் வீரர்களை தொடர்ந்து பணியாற்ற வேண்டாமென்று கூறியும், குழப்பம் விளைவிக்க முயன்ற தென் மண்டலக் கழக அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி இனியும் தொடர்ந்து கழகத்தில் நீடிப்பது முறையல்ல என்ற காரணத்தாலும் - அது கழகத்தின் கட்டுப்பாட்டை மேலும் குலைத்து விடும் என்பதாலும் - அவர், தி.மு. கழக உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

கழகத்தின் நன்மைக்காக தெரிவித்துள்ள முடிவான இந்தக் கருத்தினை, கழக உடன்பிறப்புகள் அனைவரும் ஏற்று, ஒற்றுமையோடும், கட்டுப்பாட்டோடும் கழகம் நடப்பதற்கு உடன்பிறப்புகள் அனைவரும் துணை நிற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விஜயகாந்துடன் கூட்டணி சேருவதை விமர்சித்து அழகிரி பேட்டி கொடுத்திருந்த போது அதை கருணாநிதி கண்டித்தார். கட்சி நலனுக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருணாநிதி எச்சரித்திருந்தார். அதன் தொடர்ச்சியாகவே அழகிரி தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

மு.க.அழகிரி நீக்கப்பட்ட பிறகு கோபால புரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது பேராசிரியர் அன்பழகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.என்.நேரு ஆகியோரும் உடன் இருந்தனர்.

பின்னர் வெளியே வந்த அன்பழகன் நிருபர்களிடம் கூறுகையில் கட்சியில் அழகிரி குழப்பம் விளைவிக்க முயன்றதால் கட்சி கட்டுப் பாட்டை காப்பாற்ற அவர் நீக்கப்பட்டதாகவும் இது தொடர்பாக விளக்கமாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


=====================================================


 Thanks : Maalaimalar


 

கருத்துகள் இல்லை: