சனி, 25 ஜனவரி, 2014

Jan25 சனவரி 25 - மொழிப் போர் ஈகியர் நாள்



சனவரி 25 - மொழிப் போர் ஈகியர் நாள்

தமிழ்நாட்டில் இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியைக் கண்டித்து, 1938இலும், 1965இலும் நடைபெற்ற மொழிப் போரில் உயிரீகம் செய்த ஈகியரின் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் சனவரி 25 அன்று கடைபிடிக்கப்படுகின்றது.

அ.தி.மு.க  &   தி.மு.க  / MDMK சார்பில் 25–ந்தேதி "வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள்" நடைபெற உள்ளன.





தமிழர்களுக்கு மொழிப் போர் ஈகியர் நாள் மிக முக்கியமானது.

இந்தியின் ஆதிக்கத்தை எதிர்த்து 500 க்கும் மேற்பட்ட தமிழர்கள் உயிர் நீத்தனர்.


பலர் தங்களை தீயிட்டு கொளுத்திக் கொண்டனர். பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர் . இப்படியான தியாகத்தை உலகில் வேறு எந்த இனமும் செய்ததில்லை. தங்கள் உயரிய மொழி காக்க தங்கள் இன்னுயிரை ஈந்தவர்கள் இவர்கள். ஈழத்தில் மாவீர்களுக்கு நிகரானவர்கள் இவர்கள். இவர்கள் இல்லையெனில் தமிழகத்திலும் இந்தியே அலுவல் மொழியாக இருந்திருக்கும். தகவல்கள் அனைத்தும் இந்தியில் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கும்.

இவர்கள் செய்த ஒப்பற்ற போராட்டத்தின் விளைவாக இந்தியோடு ஆங்கிலமும் இந்தியாவின் அலுவல் மொழியாக மக்கள் விரும்பும் வரை நீடிக்கலாம் என்று இந்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது. இது இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களுக்கும் விடியலை தேடித் தந்தது. இந்தி அல்லாத மாநிலங்கள் நடுவண் அரசோடு ஆங்கிலத்தில் தகவலை பரிமாறிக் கொள்ளலாம் என்ற நிலை வந்தது. அதனால் பல மாநில மொழிகள் காப்பாற்றப்பட்டது.

ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெரும் நன்மையை செய்து விட்டு மறைந்தனர் இந்த ஈகிகள். இருப்பினும் இவர்கள் செய்த தியாகத்தின் பலனை நாம் முழுமையாக அனுபவிக்க வில்லை. இந்தித் திணிப்பு இந்தியாவில் ஓயவில்லை . 


அனைத்து மாநில மக்களையும் இந்தி பேசும் மக்களாக மாற்றும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது . அந்த செயல்திட்டத்தை நிறைவேற்ற எங்கும் இந்தி எதிலும் இந்தி என்ற அறிவிக்கப்படாத இந்தித் திணிப்பை நடைமுறைப்படுத்தியுள்ளது . 


வங்கிகள் , தொடர்வண்டி நிலையங்கள் , விமான நிலையங்கள் , அஞ்சல் நிலையங்கள் , வருமான வரி அலுவலகம் , ராணுவம் , கப்பல் படை , ஊடகங்கள், பள்ளிகள் என மக்கள் பயன்படுத்தும் அனைத்து இடங்களிலும் இந்தி அல்லாத மக்களிடம் இந்தியை திணித்து வருகிறது இந்திய அரசு. 

தேசிய இன மக்களின் தாய் மொழி உரிமையை இதுநாள் வரை மறுத்து வருகிறது . இந்தியை மட்டும் ஒற்றை ஆட்சி மொழியாக அறிவித்து விட்டு தேசிய இனங்களின் அடையாளத்தை சிறுது சிறிதாக அழித்து வருகிறது இந்திய அரசு.

மொழி அழிந்தால் இனம் அழியும் என்ற கூற்றுக்கு இணங்க நம் தாய் மொழிகளை அழித்து ஒரு இன அழிப்பையே நடத்தி வருகிறது இந்திய அரசு . இந்த நிலையை நாம் தான் மாற்ற வேண்டும் . 'நம் மொழி நம் உரிமை' என்பதை நிலைநாட்டுவோம் . நம் மொழி உரிமையை கேட்டுப் பெறுவோம்.

கருத்துகள் இல்லை: