வெள்ளி, 17 அக்டோபர், 2014

அதிமுகவினரின் 6 நாள் தீபாவளிக் கொண்டாட்டம் இனிதே தொடங்கியது!

சென்னை: அடேங்கப்பா.. தாயைப் பிரிந்து தவித்த குட்டிக் குழந்தை, மீண்டும் தன் தாயைக் கண்டபோது எப்படித் துடித்து துவளுமோ, அதுபோல துள்ளிக் குதிக்கிறார்களே அதிமுகவினர்.. அந்த அளவுக்கு அவர்களின் கொண்டாட்டத்தில் துள்ளல் தெரிகிறது. தீபாவளியை இன்றே அவர்கள் ஆரம்பித்து விட்டனர். கொட்டும் மழையிலும் குத்தாட்டத்துடனும், ஆரவார கூச்சலுடனும் அதிமுகவினர் தங்களது 6 நாள் தீபாவளியை இன்றே ஆரம்பித்து வி்ட்டனர். 
 
 
 21 நாட்களாக நட்டாற்றில் விடப்பட்டவர்கள் போன்ற நிலைக்கு ஆளாகியிருந்தார்கள் அதிமுகவினர். ஆட்சி கையில், அதிகாரம் கையில்.. ஆனாலும் என்ன செய்வது என்று தெரியாமல், அத்தனை பேரின் இளக்காரம், கிண்டல், கேலி, விமர்சனங்கள் என்று பெரும் துயரத்தில் மூழ்கிப் போயிருந்தனர் அதிமுகவினர். ஆனால் அத்தனை வருத்தத்தையும் உச்சநீதிமன்ற உத்தரவு இன்று துடைத்து விட்டது.
 
 அதிமுகவினரின் 6 நாள் தீபாவளிக் கொண்டாட்டம் இனிதே தொடங்கியது! 
 
 ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்து விட்டது என்ற தகவல் பரவியதும் சென்னையில் மழையையும் பொருட்படுத்தாமல் அதிமுகவினர் வீதிகளில் உற்சாகக் கொண்டாட்டங்களில் குதித்து விட்டனர். 
 
சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதே நிலைதான். எங்கு பார்த்தாலும் அதிமுகவினர் கொண்டாட்டமாக உள்ளது. தீபாவளியை வருத்தத்துடன் கொண்டாட வேண்டி வருமோ என்ற பெரும் கவலையிலும், அதிமுக தொடங்கப்பட்ட 43 ஆண்டு விழாவை கொண்டாட முடியாமல் போய் விட்டதே என்ற வருத்தத்திலும் மூழ்கிக் கிடந்த அதிமுகவினருக்கு இன்று இரட்டிப்பு சந்தோஷத்தைக் கொடுத்து விட்டது உச்சநீதிமன்ற உத்தரவு. 
 
இதுவரை அடக்கி வைத்திருந்த அத்தனை கொண்டாட்டத்தையும் மொத்தமாக சேர்த்து வட்டியும் முதலுமாக கொண்டாடி வருகின்றனர் அதிமுகவினர். எல்லோருக்கும் தீபாவளி 22ம் தேதிதான். ஆனால் அதிமுகவினருக்கோ அது ஆறு நாள் தீபாவளியாக மாறியுள்ளது. ஆம். இன்றே அவர்கள் தீபாவளியைக் கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-cadres-begin-their-diwali-today-itself-213144.html

கருத்துகள் இல்லை: