வியாழன், 30 அக்டோபர், 2014

தமிழ் மீனவர்களுக்கு சிங்கள நீதிமன்றம் தூக்கு தண்டனை விதிப்பு :

தமிழ் மீனவர்களுக்கு சிங்கள நீதிமன்றம் தூக்கு தண்டனை விதிப்பு : ராமேசுவரத்தில் தண்டவாளம் உடைப்பு, ரெயில்கள் ரத்து !



கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்திய-இலங்கை கடல் எல்லையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஐந்து பேர் மற்றும் இலங்கை மீனவர் மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மா சூரசேன தூக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பு அளித்தார்.

கடலில் போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி தங்கச்சிமடத்தை சேர்ந்த எமர்சன், வில்சன், அகஸ்டஸ், லாங்லேட், பிரசாத் ஆகிய ஐந்து மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.  இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி பத்மா சூரசேன குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். இலங்கையை சேர்ந்த மூவருக்கும் தூக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது.




தங்கச்சிமடம் மீனவர்களுக்கு இலங்கையில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட தகவல் வெளியானதும், கொந்தளிப்பு அடைந்த ராமேசுவரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பஸ் ஒன்று எரிக்கப்பட்டுள்ளது. ரெயில் தண்டவாளம் உடைப்பு காரணமாக ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த கிளாட்வின் என்பவருக்கு சொந்தமான படகில் லாங்லட், பிரசாத், எமர்சன், அகஸ்டஸ், வில்சன் ஆகிய 5 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 5 மீனவர்களையும் பிடித்து, படகில் போதைப்பொருள் வைத்திருந்ததாக கூறி அவர்களை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேருக்கும், இலங்கை மீனவர்கள் 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து கொழும்பு உயர்நீதிமன்றம் மதியம் தீர்ப்பளித்தது. இந்த தகவல் தங்கச்சிமடம் மீனவப் பகுதியில் காட்டுத்தீபோல் பரவியது. உடனடியாக அவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மாலை 3 மணியளவில் ராமேசுவரம் - மதுரை சாலைக்கு வந்தனர். அவர்கள் சாலையில் நடுவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுரையில் இருந்து ராமேசுவரம் சென்ற வாகனங்களும், ராமேசுவரத்தில் இருந்து மதுரை வரவேண்டிய வாகனங்களும் நடுவழியில் நின்றன.

போராட்டகாரர்களில் சிலர் ரோட்டின் ஓரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மர்களுக்கு தீ வைத்தனர். திடீரென சிலர் ரோட்டின் ஓரத்தில் இருந்த ராட்சத குழாய்களை உருட்டி ரோட்டின் நடுவில் போட்டு சாலையை மறித்தனர். இதனால் அங்கு போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. நேரம் ஆக ஆக அந்த பகுதியில் மக்களின் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. இந்த போராட்டத்தின்போது அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. ஒரு தரப்பினர் ரெயில் தண்டவாளத்தை நோக்கி வந்தனர். ரெயில் தண்டவாளத்தில் டயர்களை போட்டு எரித்தனர்.

மேலும் சுத்தியல் உள்ளிட்ட கருவிகளின் உதவியால் தண்டவாளத்தை இணைக்கும் இடத்தை உடைத்து தண்டவாளத்தை பிரித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராமேசுவரம் டி.எஸ்.பி. விஜயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் போராட்டக்காரர்கள் சமாதானம் அடையவில்லை. இதனால் மாலை 5 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து சென்னை புறப்படவேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில், சேது எக்ஸ்பிரஸ் ரெயில், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் உள்ளிட்ட 4 ரெயில்கள் ராமேசுவரத்திலேயே நிறுத்தப்பட்டன.

மேலும் ராமேசுவரத்திற்கு வந்து கொண்டிருந்த அனைத்து ரெயில்களும் மண்டபம், ராமநாதபுரம் ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன. போலீசார் தொடர்ந்து போராட்டகாரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்நிலையில் பாம்பனில் இருந்து ராமேசுவரம் நோக்கிச்சென்று கொண்டு இருந்த அரசு பஸ் ஒன்று ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது. ராமேசுவரத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான நிலைமை பற்றி அறிந்ததும், கூடுதல் போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: