பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–
இலங்கை கடற்படையின் பழி வாங்கும் நடவடிக்கை காரணமாக கடந்த சில மாதங்களாக நிலவி வரும் அபாயகரமான சூழ்நிலை, தற்போது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறி இருப்பது பற்றி உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
பாக்ஜல சந்தியில் உள்ள தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் தாக்கி சித்ரவதை செய்யப்பட்டும், சட்ட விரோதமாக கடத்தி செல்லப்படுவதும், பிறகு அவர்களை மட்டும் விடுவித்து விட்டு, அவர்களது வாழ்வாதாரமான படகுகளை இலங்கை பிடித்து வைத்து கொள்ளும் தந்திரமான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவது பற்றி எங்கள் புரட்சித்தலைவி அம்மா பல தடவை உங்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்கள்.
இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியான கச்சத்தீவை மீட்கவும், பாக்ஜல சந்தியில் தங்கள் பாரம்பரிய பகுதியில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து அமைதியாக மீன் பிடிப்பதை உறுதி செய்யவும் தமிழக அரசு உறுதியாக உள்ளது. 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் சர்வதேச கடல் எல்லை தொடர்பாக இலங்கை அரசுடன் இந்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தங்கள் முடிந்து போனதாக கருதக் கூடாது என்றும் அதை செல்லாததாக அறிவிக்கக் கோரி எங்கள் புரட்சித் தலைவி அம்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.
கடந்த 8–10–2014 அன்று நான் உங்களுக்கு எழுதிய கடிதத்தில் இலங்கை சிறைகளில் உள்ள 24 தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன். மேலும் கடந்த மே மாதத்துக்குப் பிறகு சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 75 படகுகள் இலங்கை வசம் தொடர்ந்து இருப்பதையும் சுட்டிக் காட்டி இருந்தேன். தமிழக மீனவர்களின் படகுகளை திரும்ப ஒப்படைக்காமல் இத்தகைய தவறான ஒரு நிலைப்பாட்டை இலங்கை அரசு எடுத்துள்ளது.
நீண்ட காலமாக அந்த படகுகள் திருப்பி தரப் படாததால் தமிழக மீனவர்களின் குடும்பங்கள் மிகவும் மனச்சோர்வும், நம்பிக்கை இழந்த நிலையிலும் உள்ளனர். அவர்களது வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் அந்த பண்டிகை கொண்டாட்டம் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்த இல்லாததாக உள்ளது. இது தொடர்பாக என்னிடம் தொடர்பு கொண்ட தமிழக மீனவ அமைப்பினர், ‘‘இந்த பிரச்சினை பற்றி இந்திய அரசிடம் பேசி விரைவாக சுமூகத் தீர்வு காணுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் தங்கள் மீன்பிடி படகுகளுக்காக அதிக பணம் செலவழித்துள்ளனர். இலங்கை, தமிழக கடலோரங்களில் விரைவில் தொடங்க உள்ள வடகிழக்கு பருவ மழையால், அந்த விலை உயர்ந்த படகுகள் சேதம் அடையக்கூடும்.
தற்போது தமிழக மீனவர்களின் 75 படகுகளும் வெட்ட வெளியில் கிடக்கின்றன. முறைப்படி பராமரிக்கப்படாமல் உள்ள அந்த படகுகளை உடனே திருப்பித் தராவிட்டால் அவை மீண்டும் பயன்படுத்த முடியாதபடி பாதிக்கப்படலாம்.
இப்போது கூட அந்த படகுகள் பயன்படுத்தப்படாமல் உள்ளதால் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. மழைக்காலத்தில் அதிகமாக வீசும் காற்றால் விலை உயர்ந்த அந்த படகுகள் மேலும் பாதிப்படையக்கூடும். எனவே தமிழக மீனவர்களின் 75 படகுகளையும் உடனே விடுவிக்க செய்ய உரிய அமைச்சகத்துக்கு விரைவில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தங்களுக்கு வருவாயை ஈட்டித்தரும் வாழ்வாதாரமான படகுகளை இழந்துள்ளதால் தமிழக மீனவர் குடும்பங்கள் வருமானம் இல்லாமல் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் கடும் சோர்வான நிலையில் இருக்கிறார்கள்.
எனவே இந்த விவகாரத்தில் தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு தமிழக மீனவர்களின் 75 படகுகளை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக