வெள்ளி, 28 நவம்பர், 2014

Jaya Championed Tamil Cause More Than Modi: Vaiko 7 பேர் விடுதலைக்கு பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்- வைகோ பேச்சு

ம.தி.மு.க. சார்பில் சென்னை தியாகராயநகரில் பினாங்கு மாநாட்டு பிரகடன விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். தென் சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன் வரவேற்றார். கூட்டத்தில் வைகோ பேசியதாவது:-

இலங்கையில் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ராஜபக்சேவுக்கு, பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து கூறியதன் மூலம் பிரதமர் பதவியை அவர் களங்கப்படுத்தி விட்டார்.

இதுவரையிலும் எந்த பிரதமரும், இலங்கை உள்பட எந்த நாட்டு தேர்தல் என்றாலும், வெற்றி பெறுவதற்கு வாழ்த்து கூறியது இல்லை. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இலங்கைக்கு ஆயுத உதவியோ, பண உதவியோ செய்ய மாட்டோம் என்று அறிவித்தார். வாஜ்பாய் வழியை நரேந்திரமோடி கடைபிடிக்க வேண்டும்.

4 மீனவர்கள் விடுதலையில் நரேந்திரமோடி அரசு நாடகம் ஆடியது. தமிழ் ஈழம் தொடர்பாக உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு அந்தந்த நாடுகளில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழக மீனவர்களை இந்திய அரசு பாதுகாக்க வேண்டும் உள்பட பல்வேறு பிரகடனங்களை பினாங்கில் நிறைவேற்றினோம்.

இதே தீர்மானத்தை தமிழக சட்டசபையில் ஏற்கனவே நிறைவேற்றிய முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றிய துணிச்சல் ஜெயலலிதாவுக்கு உண்டு. அதனால் வரலாறு உங்களுக்கு பொன் மகுடம் சூட்டும்.

அதேபோல் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.

இதே தீர்மானத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் எண்ணுகிறோம். ஆனால் அதற்கு டெல்லி அரசு நமக்கு சாதகமாக இல்லை. மாறாக ராஜபக்சேவுக்கு வாழ்த்து கூறும் நிலையில் தான் உள்ளது. நம் பக்கம் நியாயம் உள்ளது. பிரிவினையை நாங்கள் கேட்கவில்லை. இழந்த சுதந்திரத்தை தான் கேட்கிறோம்.

இந்தி திணிப்பை தமிழகத்தில் திணித்தால், தமிழகம் தனித்து போவதை தவிர வேறு வழியில்லை.

இவ்வாறு வைகோ பேசினார்.

கூட்டத்தில் டாக்டர் மாசிலாமணி, மல்லை சத்யா, தமிழருவிமணியன், புகழேந்தி தங்கராஜ், கொளத்தூர் மணி, இயக்குனர் கவுதமன், இமயம் ஜெபராஜ், வக்கீல் தேவதாஸ், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், பாலவாக்கம் சோமு, குமரி விஜயகுமார், கவிஞர் தமிழ் மறவன், கவிஞர் கோமகன் கோட்டைசாமி, வடசென்னை மவாட்ட செயலாளர் சு.ஜீவன், ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் ரெட்சன் அம்பிகாபதி, திரு.வி.க. நகர் பகுதி இளைஞரணி செயலாளர் வீடியோ முருகன், வக்கீல் தங்கவேல், எம்.கே.மலையாளன், தாயகம் தங்கதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: