ஞாயிறு, 2 நவம்பர், 2014

Tamil Maanila Congress தமிழ் மாநில காங்கிரஸ் மீண்டும் உதயம் ஆகிறது

 த.மா.கா. மீண்டும் உதயம் ஆகிறது

ஜி.கே.வாசன் நாளை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார்

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி உடைகிறது. கட்சி மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக ஜி.கே.வாசன் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரசில் இருந்து விலகி மீண்டும் த.மா.கா.வை தொடங்குகிறார். இதுபற்றி அவர் நாளை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார்.






சென்னை, நவ.2-

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஜி.கே.மூப்பனார், கடந்த 1996-ம் ஆண்டில் தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.கா.) என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

காங்கிரசில் இணைந்த த.மா.கா

அப்போது நடந்த சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க.வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூப்பனார் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரசில் இருந்து வெளியேறி த.மா.கா.வை தொடங்கினார். அந்த தேர்தல்களில் த.மா.கா., தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றது.

மூப்பனாரின் மறைவுக்கு பிறகு அவரது மகன் ஜி.கே.வாசன் த.மா.கா. கட்சியை தலைமை தாங்கி நடத்தினார். கடந்த 2002-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மதுரையில் நடைபெற்ற விழாவில் அவர், தாய் கட்சியான காங்கிரசுடன் த.மா.கா.வை இணைத்தார். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசிலும் அவர் மந்திரியாக இடம் பெற்றார்.

மீண்டும் உதயமாகிறது

இந்த நிலையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி உடைந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் த.மா.கா. உதயமாகிறது. ஜி.கே.வாசன் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரசில் இருந்து விலகி த.மா.கா.வை மீண்டும் தொடங்க ஆலோசனை நடத்துகிறார்.

காங்கிரஸ் மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை ஞானதேசிகன் கடந்த வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தார். ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளரான இவர் கட்சி மேலிடத்தின் மீது பல்வேறு புகார்களை கூறி இருந்தார்.

ஜி.கே.வாசன் ஆதரவு

ஞானதேசிகனின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ஜி.கே.வாசன், லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களின் எண்ணங்களை ஞானதேசிகன் பிரதிபலித்து இருப்பதாக கூறினார்.

ஞானதேசிகனை தொடர்ந்து ஜி.கே.வாசனின் மற்றொரு ஆதரவாளரான கோவை தங்கம் மாநில காங்கிரஸ் பொருளாளர் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார்.

முக்கிய ஆலோசனை

ராஜினாமா செய்த ஞானதேசிகனும், கோவை தங்கமும் ஜி.கே.வாசனின் ஆதரவாளர்கள் என்பதால், தமிழ்நாட்டில் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் உதயமாகப் போவதற்கு இது அச்சாரம் என்று காங்கிரஸ் கட்சியினரால் ஆரூடம் கூறப்பட்டது.

அதை மெய்ப்பிக்கும் வகையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் ஜி.கே.வாசன் நேற்று தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், முன்னாள் மாநில பொருளாளர் கோவை தங்கம், முன்னாள் எம்.பி.ஆருண், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஞானசேகரன், விடியல் சேகர், ஈ.எஸ்.எஸ்.ராமன் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்த ஆலோசனை கூட்டத்தில், மீண்டும் த.மா.கா.வை தொடங்குவது பற்றி தனது ஆதரவாளர்களின் கருத்துகளை ஜி.கே.வாசன் கேட்டு அறிந்தார். அப்போது, த.மா. கா.வை மீண்டும் தொடங்குவதற்கு ஒட்டுமொத்த நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்தனர். இதனால், 13 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் மீண்டும் த.மா.கா. உதயமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை நாளை (திங்கட்கிழமை) பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ஜி.கே.வாசன் வெளியிட உள்ளார்.

வளமான தமிழகம்

நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘‘தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய தலைவர்களை சந்தித்து நான் கருத்துகளை கேட்டுக்கொண்டு இருக்கிறேன். தமிழகத்தை பொறுத்தவரை பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் மற்றும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் மறைந்த தலைவர்கள் வழியில் தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் ‘வளமான தமிழகம், வலிமையான பாரதம்’ அமைக்க பாடுபடுவோம்’’ என்றார்.

மறைந்த தலைவர் ஜி.கே.மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கியபோது, ‘வளமான தமிழகம், வலிமையான பாரதம்’ என்ற கோஷத்தை முன்வைத்துத்தான் தொடங்கினார். அதே கோஷத்தை ஜி.கே.வாசன் ஞாபகப்படுத்தியபோது, அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில், மக்கள் தலைவர் மூப்பனார் வாழ்க என கோஷம் எழுப்பினார்கள்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுவது குறித்து, ஜி.கே.வாசனின் நெருங்கிய ஆதரவாளர் ஒருவர் கூறியதாவது:-

உறுப்பினர் அட்டையால் சர்ச்சை

காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்களை சேர்ப்பதற்காக கடந்த 2011-ம் ஆண்டே 7 லட்சம் உறுப்பினர்கள் அட்டை அச்சடிக்கப்பட்டது. அதில், 2½ லட்சம் உறுப்பினர்கள் அட்டை மட்டுமே இதுவரை வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அட்டையில் காமராஜர், ஜி.கே.மூப்பனார் ஆகியோரின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்டதை காரணம் காட்டி, உறுப்பினர் அட்டை வழங்குவதை நிறுத்துமாறு கட்சி மேலிடம் அறிவித்தது. இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில நிர்வாகிகளை நியமனம் செய்ய கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் முயற்சி மேற்கொண்டார். அதற்கான சூழ்நிலை ஏற்படாதபோதும், தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்களை சமாதானம் செய்து, நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார்.

தேர்தல் தோல்வி

புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கு, ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பிறகு மீண்டும் மாநில நிர்வாகிகள் பட்டியல் சிறிது மாற்றப்பட்டது. அதாவது, கே.வி.தங்கபாலு ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் சேர்க்கப்பட்டனர்.

இந்த அசாதாரண சூழ்நிலை யில்தான், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தலில் தனித்துவிடப்பட்டது. 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு தோல்வி அடைந்தது.

இதேநிலை, நீடித்தால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி அழிந்துவிடும். எனவே, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் தொடங்க ஜி.கே.வாசன் முடிவு செய்து உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: