சனி, 16 நவம்பர், 2013

போர் குற்றங்கள் குறித்து ராஜபக்சேவுக்கு இங்கிலாந்து பிரதமர் கேமரூன் கெடு




கொழும்பு, -
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து மார்ச் இறுதிக்குள் நம்பத்தகுந்த, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று ராஜபக்சேவுக்கு இங்கிலாந்து பிரதமர் கேமரூன் கெடு விதித்தார்.





யாழ்ப்பாணத்தில் கேமரூன்
காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு சென்ற இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் சென்றார்.

இங்கிலாந்திடம் இருந்து இலங்கை சுதந்திரம் அடைந்த 1948-ம் ஆண்டிலிருந்து இதுவரை எந்தவொரு சர்வதேச தலைவரும், தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்துக்கு சென்றதில்லை. அந்த வகையில் டேவிட் கேமரூனின் யாழ்ப்பாணம் பயணம் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுவிட்டது.அங்கு முகாம்களில் வாழ்கிற தமிழ்மக்களை டேவிட் கேமரூன் சந்தித்து பேசினார். அவர்களின் துயரங்களை, வேதனைகளை, கண்ணீர்க்கதைகளை மிகுந்த பொறுமையுடனும், கனிவுடனும் கேட்டார்.



வெளிப்படையாக விவாதம்
அந்த சந்திப்பை தொடர்ந்து டேவிட் கேமரூன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-இலங்கை அதிபர் ராஜபக்சேயை சந்தித்துப்பேசினேன். இலங்கையில் நடந்ததாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான, நம்பத்தகுந்த விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; அனைத்து தரப்பு மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டும்; போரினால் இடம் பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக, கட்டுப்பாடுகளற்று விவாதித்தோம்.

மார்ச் வரை கெடு
இலங்கையில் போர் முடிவின்போது நடந்த சம்பவங்கள் தொடர்பாக நம்பத்தகுந்த, வெளிப்படையான, சுதந்திரமான உள்நாட்டு விசாரணை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்பதை ராஜபக்சேயிடம் கூறினேன். அதை மார்ச் இறுதிக்குள் அவர் செய்ய வேண்டும். அது நடைபெறாவிட்டால், நாங்கள் எங்கள் நிலையைப் பயன்படுத்தி, இந்தப் பிரச்சினையை ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் எடுத்துச்செல்வோம். சுதந்திரமான விசாரணை நடத்துவது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையருடன் இணைந்து செயல்படுவோம்.வடக்கு மாகாணத்தில் உள்ள, போரினால் பாதிப்புக்குள்ளான தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை இலங்கை ஏற்படுத்த வேண்டும் என்பது உறுதியானது.இவ்வாறு டேவிட் கேமரூன் கூறினார்.


அவகாசம் ஏன்?

தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு டேவிட் கேமரூன் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:-சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு எதற்காக நீங்கள் மார்ச் வரை காத்திருக்க வேண்டும்?
பதில்:-போரினால் ஏற்பட்ட விளைவுகளிலிருந்து இன்னும் மீண்டு வர வேண்டி உள்ளது, எனவே அவகாசம் வேண்டும் என்று ராஜபக்சே கூறினார். அதை நான் ஏற்றுக்கொண்டேன். நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கு அவகாசம் தேவைப்படுகிறது. அதை நான் புரிந்துகொள்கிறேன். போர் இல்லா பிரதேசத்தில் நடந்தவை (தமிழ் இனப்படுகொலை) குறித்து, சுதந்திரமான விசாரணை தேவை. சர்வதேச விசாரணை நடத்துவதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.கேள்விகளை எழுப்பினீர்களா?
கேள்வி:-அதிபர் ராஜபக்சேயிடம் எழுப்புவதற்கு என்னிடம் சில கடினமான கேள்விகள் இருக்கின்றன என்று நீங்கள் கூறினீர்கள். அந்த கேள்விகளை நீங்கள் அவரிடம் எழுப்பினீர்களா?
பதில்:-வெளிப்படையாக விவாதித்தோம். ஆனால் நான் கூறிய எல்லாவற்றையும் ராஜபக்சே ஏற்றுக்கொள்ளவில்லை.

ஏற்பதற்கு இல்லை
மனித உரிமை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், ஊடகங்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும், தமிழ் மக்கள் உரிய மதிப்புடனும், கண்ணியத்துடனும் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும். இவை எல்லாவற்றுக்கும், இலங்கை சரியான பாதையில் பயணிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.நல்லிணக்கம் ஏற்படுத்துவதை பொறுத்தமட்டில், போரினால் ஏற்பட்ட ரணங்கள் ஆற வேண்டும். இவையெல்லாம் நடைபெறுவதற்கு மேற்சொன்ன பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். சானல் 4 காட்டிய சில உறைய வைக்கும் சம்பவங்கள் நடைபெற்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற இடங்களில் மறுகுடியேற்றம் நடைபெற்றுள்ளது என்பதை ஏற்பதற்கு இல்லை.

நல்லிணக்கத்துக்கு வாய்ப்பு
நான் திட்டமிட்டிருந்தபடி, அனைத்து பிரச்சினைகளையும் ராஜபக்சேயுடன் விவாதித்தேன். நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கு அவருக்கு வாய்ப்பு இருப்பதை சொன்னேன்.
இதையெல்லாம் சுட்டிக்காட்டுவதற்கு இங்கு வர வேண்டியது முக்கியம். (காமன்வெல்த் மாநாட்டில் கனடா, மொரிசியஸ், இந்திய தலைவர்கள் பங்கேற்காமையை இப்படி சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் சென்றது ஏன்?
கேள்வி:-யாழ்ப்பாணம் செல்ல ஏன் விரும்பினீர்கள்? அந்த பயணத்துக்கு பின்னர் நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
பதில்:-ஒரு அரசியல்வாதியாக, பிரதமராக நான் செல்லுகிறபோது, அந்த மக்கள் கற்றுக்கொள்ள முடியும். அப்படி சென்றால்தான், கள நிலவரத்தைப் பார்க்க முடியும். புரிந்துகொள்ள முடியும்.
நான் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற சில ஊடகங்களின் பத்திரிகையாளர்களுடன் யாழ்ப்பாணம் சென்றதின் நோக்கம், உறைய வைக்கிற அளவுக்கு அங்கே நடந்த சில சம்பவங்களை வெளிச்சம் போட்டு காட்டுவதுதான்.

பத்திரிகை சுதந்திரம்
இலங்கையில் பத்திரிகைகளுக்கு சுதந்திரம் வேண்டும். இலங்கை அரசு அதை செய்யும் என நம்புகிறேன்.வடக்கு மாகாணத்தின் முதல்-மந்திரி விக்னேசுவரனை சந்தித்தேன். அது நல்லதொரு சந்திப்பு. அந்த மாகாண மக்களின் பிரச்சினைகளில் அவரோடு இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். யாழ்ப்பாணத்துக்கு சென்றது, அங்குள்ள மக்களுக்கு குரல் கொடுக்கத்தான். உலகத்தின் குரலை தெரிவிக்கத்தான். அது கேட்கப்படவேண்டும்.முடிவாக, விடுதலைப்புலிகள் திரும்புவதை யாரும் விரும்பவில்லை.

பழிவாங்குமா இலங்கை?
கேள்வி:-ஐ.நா. மனித உரிமை கமிஷனர் நவிபிள்ளை வந்து சென்றபின்னர், அவரிடம் புகார் கூறிய மக்கள் பழிவாங்கப்பட்டதுபோல, இப்போது நீங்கள் யாழ்ப்பாணம் சென்று வந்த நிலையில், அந்த மக்கள் மீது பழிவாங்கும் போக்கில் இலங்கை அரசு செயல்படாது என்று எப்படி உங்களால் உறுதி கூற முடியும்?
பதில்:-இலங்கை அரசின் பதில் நடவடிக்கையை உலகம் கண்காணிக்கும். அதிகாரிகள் சர்வதேச கருத்தினை மதிப்பார்கள் என்று கருதுகிறேன். தமிழ் மக்களை அவர்களுக்கு உரித்தான கண்ணியத்துடனும், மதிப்புடனும் இலங்கை மக்கள் நடத்துவார்கள் என்று எண்ணுகிறேன்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.




கருத்துகள் இல்லை: