செவ்வாய், 5 நவம்பர், 2013

இந்தியா பங்கேற்க எதிர்ப்பு வலுக்கிறது ! PM URGED to boycott CHOGM




http://www.dailythanthi.com/2013-11-05-2-more-Cong--ministers-urge-PM-to-boycott-CHOGM




காமன்வெல்த் நாடுகள் மாநாடு இலங்கை தலைநகர் கொழும்பில் 15 முதல் 17–ந்தேதி வரை நடைபெற உள்ளது.விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரின்போது இலங்கை ராணுவம் தமிழர்களை கொன்று குவித்ததுடன், மனிதஉரிமை மீறலில் ஈடுபட்டது. இலங்கை அரசின் செயலுக்கு ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.


தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு

இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே அரசு நடத்தும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது.

தமிழக சட்டசபையிலும் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதமும் எழுதி இருக்கிறார். தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்துள்ளன. திராவிடர்கழகம் உள்ளிட்ட அமைப்புகளும் இந்தியா பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றன.


விடுதலைப்புலிகள் இயக்க ஊடக பிரிவில் பணிபுரிந்த இசைப்பிரியா படுகொலை தொடர்பான புதிய வீடியோ, தமிழகத்தின் எதிர்ப்பை மேலும் வலுப்படுத்தி வருகிறது.

ஏ.கே.அந்தோணி–ஜி.கே.வாசன்
இந்தநிலையில் மத்திய மந்திரிகள் ஏ.கே.அந்தோணி, ஜி.கே.வாசன் ஆகியோர் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை மாநாட்டில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்தனர். ஜி.கே.வாசன் நேரடியாக பிரதமர் மன்மோகன்சிங்கை டெல்லியில் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தினார்.
‘‘உலகம் முழுவதும் உள்ள 9 கோடி தமிழர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில், மத்திய மந்திரிசபை பாதுகாப்பு குழு பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்று, கேரளாவை சேர்ந்தவரும், மத்திய ராணுவ மந்திரியுமான ஏ.கே.அந்தோணி கூறி இருக்கிறார்.

மேலும் 2 மந்திரிகள் எதிர்ப்பு
பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை செல்ல மேலும் 2 மத்திய மந்திரிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய மந்திரி ஜெயந்திநடராஜன் நேற்று சென்னை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, இலங்கையில் மனித உரிமை மீறல், போர்க்குற்றம் நடந்த உள்ளன. காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள கூடாது என்றும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு கடிதம் எழுத இருப்பதாக தெரிவித்தார்.இதேபோல புதுச்சேரியை சேர்ந்த மத்திய மந்திரி நாராயணசாமியும் கருத்து தெரிவித்து இருக்கிறார். இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்ற எனது கருத்தை பிரதமருக்கு தெரிவித்து விட்டதாக அவர் கூறியிருக்கிறார்.

எதிர்ப்பு வலுக்கிறது
இதற்கிடையே காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் தமிழகத்தில் வலுவடைந்துள்ளது. திராவிடர் கழகத்தினர், மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை தாம்பரத்தில் தமிழ்நாடு மாணவர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடற்கரை நோக்கி சென்ற ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இலங்கைக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 20 மாணவர்களை கைது செய்தனர். இதனால் ரெயில் போக்குவரத்து 10 நிமிடம் பாதிக்கப்பட்டது.

கோவை, திருப்பூரில் ரெயில் மறியல்
இதுபோல கோவையில் விடுதலைசிறுத்தைகள் அமைப்பு சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. கோவை ரெயில் நிலையத்துக்கு வந்த சென்னை–மங்களூர் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.இதுபோல திருப்பூரில் ஆதித்தமிழர் மக்கள் கட்சி சார்பில் நேற்று காலை ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் ரெயில் மறியல் செய்ய முயன்ற திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி
நீலகிரி மாவட்டம் ஊட்டி ரெயில் நிலையத்தை முற்றுகையிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். கூடலூரில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 41 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பந்தலூரில் இந்தியன் வங்கியை முற்றுகையிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 21 பேரை போலீசார் கைது செய்தனர்.குன்னூரில் லெவல் கிராசிங் பகுதியில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 31 பேரை போலீசார் கைது செய்தனர். கோத்தகிரி தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

சுடர் பயணம் சென்றவர்கள் கைது
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது, ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கையை இனப்படுகொலை நாடாக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் ஈழ விடுதலை அமைப்புக்கான மாணவர்கள் கூட்டமைப்பினர் நெல்லை மாவட்டம் இடிந்தகரை, தர்மபுரி, சென்னை, ஊட்டி, விருதுநகர் ஆகிய 5 இடங்களில் இருந்து தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு சுடர் பயணம் மேற்கொள்ள முடிவு செய்திருந்தனர்.அதன்படி சுடர் பயணம் தொடங்கியவர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் சாலைமறியல்
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்தும், கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் புதுச்சேரியில் திராவிடர் கழகத்தினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 4 பெண்கள் உள்பட 86 பேர் கைது செய்யப்பட்டனர்.

இன்று
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி சென்னையில் விடுதலைசிறுத்தைகள் அமைப்பு சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதே கோரிக்கையை வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் 8–ந்தேதி போராட்டம் நடைபெற இருக்கிறது

கருத்துகள் இல்லை: