10-11-2013
புதுடெல்லி
பெரும் சர்ச்சைக்கிடையே இலங்கை தலைநகர் கொழும்பில் காமன்வெல்த் மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு காரணமான இலங்கையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளக்கூடாது என தமிழக அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என தமிழக சட்டசபையிலும் சமீபத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிரதமர் செல்லவில்லை
பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ள பலத்த எதிர்ப்பு உள்ளதால் இதுபற்றி முடிவு எடுக்க காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட குழு இரண்டு முறை கூடியது. ஆனால் சாதக, பாதகங்கள் விவாதிக்கப்பட்டதே தவிர முடிவு எடுக்க முடியவில்லை.
தமிழகத்தில் நிலவும் எதிர்ப்பு மட்டுமின்றி சொந்த கட்சியை சேர்ந்த மத்திய மந்திரிகளும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதால் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க விரும்பவில்லை.
5 மாநில சட்டசபை தேர்தல்களை காரணம் காட்டி, அவர் இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்து விடுவார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
சல்மான் குர்ஷித்
இந்த நிலையில் டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
சர்வதேச நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்கு அழைப்பு வருகிறபோது, அது குறித்து முடிவு எடுக்க பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டி உள்ளது. அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
1993–ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற 10 காமன்வெல்த் மாநாடுகளில் பிரதமர் 5 முறை பங்கேற்றிருக்கிறார். 4 முறை மந்திரிகளே இந்திய குழுவுக்கு தலைமை தாங்கி உள்ளனர்.
இலங்கைக்கு தகவல்
இப்போது நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டு மந்திரிகள் மட்டத்திலான கூட்டத்தை பொறுத்தமட்டில் வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் கலந்து கொள்கிறார். இதுகுறித்து இலங்கைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருடன் வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங், மூத்த அதிகாரிகள் பவன் கபூர், நவ்தேஜ் சர்மா ஆகியோர் உதவியாக உடன் செல்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடிதம் எழுதுகிறார்
இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் அவர் தான் இந்திய குழுவுக்கு தலைமை தாங்குவார் என்று தெரிகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வரமாட்டார் என்ற தகவல் இந்திய வெளியுறவுத்துறை சார்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை அரசுக்கு முறைப்படி தெரிவிக்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக