வெள்ளி, 16 மே, 2014

2014 : ADMK third Largest Party அதிமுகவுக்கு தேசிய அளவில் 3வது இடம்!


Thanks : Vikatan news.


நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அமோக வெற்றி பெற்ற அ.தி.மு.க., தேசிய அளவில் மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

16வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த மாதம் (மே) 7ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 12 ஆம் தேதி வரை 9 கட்டங்களாக நடைபெற்றது. கடந்த மாதம் 24ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது.

இதையடுத்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தமிழகமெங்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அவரது பிரசாரத்தில், காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வை டெபாசிட் இழக்க வைக்க வேண்டும் என்ற கோரிக்கையே முக்கிய இடம் பிடித்திருந்தது.

இந்நிலையில், நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் அதிமுக போட்டியிட்ட 39 தொகுதிகளில் 37 தொகுதிகளில் அமோக வெற்றிபெற்றுள்ளது.  தி.மு.க.வின் முக்கிய புள்ளிகளான டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன் மற்றும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டவர்களை தோற்கடித்து அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது.

தேசிய அளவில் 3வது இடம்

இதேபோல், தேசிய அளவில்  பா.ஜ.க. பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளது. நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.  இரண்டாம் இடத்தை காங்கிரஸ் பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் அமோக வெற்றி பெற்ற அ.தி.மு.க. தேசிய அளவில் 3வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

ஆட்சியில் பங்கெடுக்க முடியாத வெற்றி

அதே சமயம் எந்த ஒரு கட்சியின் தயவையும் எதிர்பார்த்து ஆட்சியமைக்க கூடிய நிலையில் பா.ஜனதா இல்லை என்பதால், அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றும் மத்திய அமைச்சரவையில் இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. "மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கிற அரசு அமைய வேண்டும்" என்றும், " செய்வீர்களா...செய்வீர்களா?"  என்றும் அவர் மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தை மக்கள் ஏற்றுக்கொண்டு அக்க்கட்சிக்கு 37 இடங்களை வாரி வழங்கிய போதிலும், அதனால் பயன் ஏற்படாத நிலைதான் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் ஜெயலலிதாவுக்கு இருக்கும் வருத்தத்தை விட, அதிமுக வெற்றிபெற்றால் மத்திய அமைச்சராகிவிடலாம் என்ற கனவில் இருந்த அக்கட்சியின் முக்கிய தலைவர்களுக்குத்தான் நிரம்ப வருத்தம் இருக்கும்.

கருத்துகள் இல்லை: