சனி, 17 மே, 2014

2014: Jaya Thanks Tamilnadu people அ.தி.மு.க வரலாற்று சிறப்பு வெற்றி ! தமிழக மக்களுக்கு " முதல்வர்" ஜெயலலிதா நன்றி



வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத்தந்த தமிழக மக்களுக்கும், உழைத்த அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், தோழமைக் கட்சியினருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.


சென்னை போயஸ் தோட்டத்திலுள்ள தமது இல்லத்தில் நேற்று மதியம் முதல்-அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி வருமாறு:- 

வரலாறு காணாத வெற்றி

நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை அ.தி.மு.க.வுக்கு வழங்கியுள்ள எனது அன்பார்ந்த தமிழக மக்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்கள் என் மீதும், நான் தலைமை ஏற்றிருக்கும் அ.தி.மு.க.வின் மீதும் முழுமையான நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதனை இந்தத்தேர்தல் முடிவுகள் உலகுக்கே எடுத்துக்காட்டி உள்ளன.

வாக்களித்து வரலாற்று சிறப்புமிக்க, மகத்தான வெற்றியை அளித்த தமிழக மக்களுக்கும், வாக்காளப் பெருமக்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  

அ.தி.மு.க.வின் தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட, அ.தி.மு.க.வின் தொண்டர்கள், இந்த மகத்தான வெற்றிக்காக அல்லும் பகலும் அயராது உழைத்த எம்.ஜி.ஆர். ரத்தத்தின் ரத்தமான, என் உயிரினும் மேலான அ.தி.மு.க. உடன்பிறப்புகள், அ.தி.மு.க. கிளை செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வார்டு மற்றும் அ.தி.மு.க. வட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பேரூராட்சிக்கழக நிர்வாகிகள், மற்றும் செயலாளர்கள், நகர, ஒன்றியக்கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாவட்டக்கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பெருமக்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் கழகத்தின் சார்பில் அமைப்புகளில் பொறுப்புகள் வகிக்கும் நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


தமிழக மக்களுக்கு நன்றி

அ.தி.மு.க.வுக்காக பிரசாரத்தை மேற்கொண்டு, அ.தி.மு.க.வின் வெற்றிக்காக பாடுபட்ட தோழமைக்கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். முழுமையான முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

இருப்பினும் இந்த தேர்தல் முடிவுகள் எந்த திசையை நோக்கிச்செல்கின்றது என்பது அனைவருக்கும் தெளிவாகிவிட்டதால், இப்போது உங்களைச்சந்தித்து இந்தக்கருத்துக்களை தெரிவித்துக்கொண்டிருக்கிறேன். முதலில் இந்தத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மகத்தான, மாபெரும் வெற்றியைத் தேடித்தந்த எனது பாசமுள்ள தமிழக மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

இந்த வரலாற்று வெற்றி இணையற்ற இதுவரை நிகழ்ந்திராத ஒரு வரலாற்று வெற்றியாக, எந்தவித கூட்டணியோ, அல்லது யாருடைய மற்ற கட்சிகளின் ஆதரவோ இல்லாமல் தனித்து நின்று அ.தி.மு.க. இந்த வெற்றியை அடைந்துள்ளது.இந்த நேரத்தில் இதன் வெற்றிக்காக உண்மையாக சேவை உள்ளத்தோடு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

   3-வது பெரிய கட்சி

பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுக்கச்செய்து கவுரவப்படுத்திய தமிழக மக்களுக்கு எனது நன்றியை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக மக்கள் என் மீதும், அ.தி.மு.க. மீதும் வைத்துள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாக நாங்கள் நடந்து கொள்வோம் என்பதைத் தெரிவித்து, பாராளுமன்றத் மக்களவைத் தேர்தலையொட்டி அ.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் என்னென்ன வாக்குறுதிகளை தமிழக மக்களுக்கு வழங்கியிருக்கிறோமோ, அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அ.தி.மு.க. மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. பாராளுமன்றத்தில் பொறுப்புள்ள கட்சியாக செயல்படுவோம். நிச்சயமாக கடந்த மூன்றாண்டு காலமாக பலமக்கள் நலத்திட்டங்களை நாங்கள் நிறைவேற்றியிருக்கிறோம். சதா சர்வ காலமும் மக்களைப்பற்றியே சிந்திக்கிற ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்பதை பலமுறை நான் சொல்லியிருக்கிறேன். அதைப்போலவே மக்கள் நலனைப்பற்றி மட்டுமே சிந்திக்கிற மாநில அரசாக அனைத்திந்திய அ.தி.மு.க. அரசு விளங்குகிறது. மக்களுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியிருக்கிறோம். அந்தத்திட்டங்களின் பயன்களெல்லாம் மக்களை சென்றடைந்திருக்கின்றன. அதனால் மக்கள் தங்கள் மகிழ்ச்சியை, தங்கள் அங்கீகாரத்தை இந்தத்தேர்தலின் மூலம் தெரிவித்திருக்கிறார்கள். மக்கள் என் மீதும் கொண்டுள்ள அளவு கடந்த அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

புதிய மத்திய அரசுக்கு வாழ்த்து

அமையவுள்ள புதிய மத்திய அரசுக்கும், புதிய பிரதமருக்கும் எனது வாழ்த்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அமையவுள்ள புதிய மத்திய அரசு தமிழகத்துடன் நட்புறவோடு செயல்படும் என்றும் நம்புகிறேன். இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார். 

-------------------------------------------------------
  

 

கருத்துகள் இல்லை: