முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த கடந்த 2006–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து, அந்த தீர்ப்பை நிறைவேற்றாமல் இருக்கும் வகையில் கேரள அரசு சட்டசபையில் சட்டம் நிறைவேற்றியதற்கு எதிராக, முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அப்போதைய அ.தி.மு.க. அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
அணை பலவீனமாக இருப்பதாகவும், எனவே அது உடைந்தால் கேரளாவில் பெரும் சேதம் ஏற்படும் என்றும் கேரள அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதிடப்பட்டது. ஆனால் இது தவறான வாதம் என்றும், அணை உறுதியுடன் இருப்பதால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும் தமிழக அரசின் சார்பில் ஆதாரங்களுடன் ஆணித்தரமான வாதம் எடுத்து வைக்கப்பட்டது.
இதை உறுதிப்படுத்தும் வகையில், சுப்ரீம் கோர்ட்டு அமைத்த நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான குழுவும் அணையை நேரில் ஆய்வு செய்து, அணை மிகவும் பலமாக இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தது.
மேலும் 2011–ம் ஆண்டு டிசம்பர் 15–ந் தேதி அ.தி.மு.க. ஆட்சியின் போது சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்டப்பட்டு, முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழ்நாடு தனக்குள்ள உரிமையை விட்டுக் கொடுக்காது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இப்படியாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா எடுத்த தீவிர நடவடிக்கைகளின் காரணமாக, முல்லைப் பெரியாறு அணை வழக்கில் தமிழகத்துக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்து இருக்கிறது. அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அனுமதித்தும், கேரள அரசு கொண்டு வந்த சட்டம் செல்லாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு இப்போது வழங்கி இருக்கும் தீர்ப்பு தமிழக விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக