===========================================
Thanks : TamilNesan / Semparuthi
News : http://www.semparuthi.com/?p=109929
மலேசிய
அரசாங்கம் இரகசியமாகவும் வலுக்கட்டாயமாகவும் இரு சிறீலங்கா அகதிகளையும்
அடைக்கலம் தேடி வந்த இன்னொருவரையும் நேற்று சிறீலங்கா அரசாங்கத்திடம்
ஒப்படைத்தது.
இயக்க பிரதிநிதிகள் பலர்
கலந்து கொண்ட இந்நிகழ்வை சுவராம் தலைவர் கா.ஆறுமுகம், அதன் வழக்குரைஞர்
நியு சின் இயு, ஒருங்கிணைப்பாளர் ஆர். தேவராஜன் ஆகியோர் வழி நடத்தினர்.
கோலாலம்பூரிலுள்ள ஐநா ஹைகமிசனால் அகதிகள் என்ற அங்கீகாரம்
வழங்கப்பட்டிருந்த கிருபாஹரன் மற்றும் கிருபநாதன் ஆகியோருடன் அடைக்கலம்
கோரி மனு செய்திருந்த குசேந்தன் என்பவரையும் மலேசிய அரசாங்கம் அனைத்துலக
நீதி கோட்பாடுகளுக்கு முரணாக நாடு கடத்தி மீண்டும் சிறீலங்கா
அரசாங்கத்திடம் ஒப்படைத்ததை சுவாராம் கடுமையாகக் கண்டிக்கிறது என்று
அக்கழகத்தின் தலைவரான கா. ஆறுமுகம் இன்று காலை மணி 11.00 க்கு பெட்டாலிங்
ஜெயாவில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.“மலேசிய அரசாங்கத்தின் இச்செயல் ‘Non-refoulement’ என்ற அனைத்துலக வழக்கமான நடைமுறைச் சட்டத்தை மீறியதாகும். இச்சட்டப்படி அரசாங்கத்தின் கொடுஞ்செயலால் உண்மையாகக் பாதிக்கப்பட்ட ஒருவர் அக்கொடுங்கோலரிடம் மீண்டும் ஒப்படைக்கப்படுவதை தடை செய்கிறது”, என்று கூறிய ஆறுமுகம், “இம்மூவரும் நாடு கடத்தப்பட்டதை அவர்களுடைய குடும்பத்தினருக்கும், ஐநா அகதிகள் ஹைகமிசனுக்கும், சுவாராமுக்கும் தெரிவிக்கவில்லை. இதனால் நாங்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளோம்”, என்றார்.
போலீசார் இம்மூவரையும் கடந்த 15.5.2014-இல் கைது செய்தது. அவர்கள் 14 நாள்கள் வரையில் தடுப்புக்காவலில் வைத்திருக்க ரிமாண்ட் மனுவை போலிஸ் பெற்றது என்றும் அதைத்தொடர்ந்து நேற்று அவர்களை நாடு கடத்தியது சட்டப்படி தவறாகும் என்று சுவாராமின் மனித உரிமை வழக்குரைஞரான நியு சின் இயு அச்செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இம்மூவரும் நடத்தப்பட்ட முறை இமிகிரேசன் சட்டத்திற்கு முற்றிலும் முரணானதாகும் என்றாரவர்.
இமிகிரேசன் இலாகா இம்மூவரையும் தடை செய்யப்பட்ட நபர்கள் என்று அறிவிக்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டிய நியு சின் இயு “இமிகிரேசன் சட்டம் முற்றிலும் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்த இலாகா இவ்வாறு நடந்து கொண்டது இது முதல் தடவை அல்ல. 2004 மற்றும் 2012 ஆண்டுகளிலும் இவ்வாறு நடந்துள்ளது”, என்றாரவர்.
“இம்மூவரும் நாடு கடத்தப்பட்டது அவர்களை மீண்டும் இனப்படுகொலை நடத்தி வரும் கொலையாளியிடம் கொடுப்பதற்கு ஒப்பாகும். மலேசியா அனைத்துலகச் சட்டத்தை மீறிவிட்டது”, என்று இடித்துரைத்த அவர், “அம்மூவரும் தீவிரவாதிகள் என்றால், போலீஸ்படைத் தலைவர் அவர்களை ஏன் நீதிமன்றத்தில் நிறுத்தவில்லை”, என்று வினவினார்.
சித்திரவதை நிச்சயம்
மலேசிய அரசாங்கத்தால் அனைத்துலகச் சட்ட மற்றும் நீதி முறைகளுக்கு முரணாக நாடு கட்டத்தப்பட்டுள்ள அம்மூவரையும் நிச்சயமாக சித்திரவதை செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை என்பதோடு அவர்கள் உயிருக்கு ஆபத்தும் ஏற்படலாம் என்றும் கா. ஆறுமுகம் கவலை தெரிவித்தார்.
அவர்களை நாடு கடத்துவதில் ஏன் இந்த அவசரம்? அந்நாட்டு அரசாங்கத்திற்கு பயந்துதானே இங்கு அடைக்கலம் தேடுகிறார்கள். அப்படி வெளிநாடுகளில் வாழ்கின்றவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் சிறீலங்கா அரசாங்கத்தின் திட்டத்தை மலேசிய அரசாங்கம் ஆதரிக்கிறதா?
மே 25, 2014 இல், போலீஸ் படைத்தலைவர் காலிட் அபு பாக்கார் வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கையில் அவர்கள் தீவிரவாதிகள் என்று கூறியுள்ளார். அச்சந்தேகப் பேர்வழிகள் அதிகாரிகளின் நடவடிக்கைகளிலிமிருந்து தப்பித்துக்கொள்வதற்காக யுஎன்எச்சிஆர் அட்டைகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்று அவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
“அம்மூவரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படாமல், தீவிரவாதிகள் என்று நிருபிக்கப்படாத நிலையில் அவர்கள் மீது அவ்வாறான முத்திரை குத்தப்பட்டுள்ளதின் அடிப்படை மற்றும் உள்நோக்கம் குறித்து கேள்வி எழுப்புகிறோம் என்றார் சுவராம் ஒருங்கிணைப்பாளர் ஆர். தேவராஜன்.
“இந்த அறிக்கை இவ்விவகாரம் மீது விசாரணை மேற்கொண்டுள்ள அதிகாரி அளித்த தகவலுக்கு முற்றிலும் எதிர்மாறானதாக இருக்கிறது. இம்மூவரும் இமிகிரேசன் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாகவும் கைது செய்யப்பட்ட மே 15 ஆம் தேதியிலிருந்து 14 நாள்களுக்கு அவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அதிகாரி சுவாராமிடம் தெரிவித்திருந்தார்”, என்று செய்தியாளர் கூட்டத்தில் கூறிய தேவராஜன், “அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் ஏன் இந்த திடீர் மாற்றம்: இமிகிரேசன் சட்டம் சம்பந்தப்பட்ட குற்றங்களிலிருந்து இப்போது தீவிரவாதத் தொடர்பு என்ற குற்றச்சாட்டு. இது அவர்கள் நாடுகடத்தப்படுவதை நியாயப்படுத்துவதற்காக கட்டப்படும் கதையா?”, என்று வினவினார்.
ஐஜிபி சட்டஆளுமைக்கு உட்பட்டு நடக்க வேண்டும்
குற்றவாளி என்று நிருபிக்கப்படும் வரையில் மாசற்றவர் என்பது மலேசியாவின் சட்டஆளுமையாக இருப்பதாகத் தெரியவில்லை என்பதைச் சுட்டிக் காட்டிய ஆறுமுகம், “ஐஜிபி ஒரு நீதிபதி அல்ல என்பதையும் அவர் அகதிகளையும் அடைக்கலம் தேடுபவர்களையும் முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமலும் விசாரணை செய்யப்படுவதற்கான அவர்களுக்கு உரிய உரிமைகளை அளிக்காமலும் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு செயல்படக்கூடாது என்பதை சுவாராம் அவருக்கு நினைவூட்ட விரும்புகிறது”, என்றார்.
ஐஜிபி அவரது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினாரா என்பதை விசாரிக்க ஒரு சுயேட்சையான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை சுவாராம் முன்வைப்பதாக ஆறுமுகம் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக