வியாழன், 20 செப்டம்பர், 2012

உதயன் 20Sep2012




இனப்பிரச்சினைக்குச் சாத்தியமான அரசியல் தீர்வு காணுமாறு, புது டில்லியில் இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ள சந்திப்பின் போது, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அழுத்தம் கொடுப்பார் என்று புதுடில்லி வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.
 
சாஞ்சியில் பௌத்த பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்பதற்காக, மத்தியப் பிரதேச மாநில அரசின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ மூன்று நாள் பயணமாக நேற்றுப் புதுடில்லி சென்றுள்ளார்.
 
நேற்றிரவு புதுடில்லியைச் சென்றடைந்த அவருக்கு, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இன்று இராப்போசன விருந்தளிக்கிறார். இந்தத் தகவலை இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பர்தீன் உறுதிப்படுத்தியுள்ளார்.
 
இந்த இராப்போசன விருந்துடனான சந்திப்பின் போது, இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வு குறித்த விவகாரங்கள் தொடர்பான இந்தியாவின் கரிசனைகள் குறித்து மன்மோகன்சிங் வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அத்துடன் இலங்கையில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும்படி மன்மோகன் சிங் அழுத்தம் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக ஐ.ஏ.என்.எஸ் செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
 
இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திக்கும்போது இரண்டு முக்கியமான விடயங்களை வலியுறுத்திப் பேச்சு நடத்தவுள்ளார் என அரச உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.






உதயன் epaper 20Sep2012   <<<<<

கருத்துகள் இல்லை: