புது தில்லி, செப்.13:
கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்குத் தடை விதிக்க
முடியாது என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை கூறிவிட்டது.
இருப்பினும் அணு மின் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான பிரச்னைகளை ஆராய்வதற்கு நீதிமன்றம் ஒப்புக் கொண்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை இம்மாதம் 20-ம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் கூறினர்.கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படுவதற்குத் தடையில்லை என கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை எதிர்த்து ஜி. சுந்தர்ராஜன் என்பவர் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அணு உலை அமைப்பதற்கு அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு உள்ளது என்றும் கூறினார். இந்த வழக்கு தொடர்பாக அரசு தரப்பு வாதம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.இதைக் கேட்ட நீதிபதிகள், ""நீங்கள் அணு உலை அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பது புரிகிறது. உங்களது கவலை முழுவதும் அணு மின் நிலையத்தால் அப்பகுதி மக்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்பதுதான். உங்களது எதிர்ப்பு அணு மின் நிலையத்துக்கு எதிரானதல்ல, நிபுணர் குழுவின் 17 பாதுகாப்பு பரிந்துரைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான். அத்தகைய பாதுகாப்பு அம்சங்களை நீதிமன்றம் நிச்சயம் பரிசீலிக்கும்,'' என்றனர்.
பாதுகாப்புப் பரிந்துரைகளில் 6 பரிந்துரைகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறிய பூஷண், இந்நிலையில் எரிபொருள் நிரப்பும் பணியைத் தொடர அனுமதிக்கக் கூடாது என்றார்.அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் கூலம் இ. வாகனவதி, சொலிசிட்டர் ஜெனரல் ரோஹின்டன் நாரிமன், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் ஆகியோர் ஆஜராகி, மனுதாரரின் கோரிக்கையை ஏற்கக் கூடாது என வாதாடினர். அணு உலை மிகவும் பத்திரமானது என்றும், எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கினாலும் அது செயல்படுவதற்கு இரண்டு மாதம் ஆகும் என்று தெரிவித்தனர்.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ""நாங்கள் அணு உலைக்கு எதிரானவர்களோ அல்லது மனுதாரருக்கு ஆதரவாக செயல்படக்கூடியவர்களோ அல்லர். ஆனால், அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் (ஏஇஆர்பி) அறிவுறுத்திய பரிந்துரைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பது தெரிய வேண்டும்'' என்று கூறினர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முழுமையாக பரிசீலிக்க வேண்டியுள்ளது.
அத்துடன் இந்த வழக்கை முழுமையாக ஆரம்பம் முதல் விசாரிக்க வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டனர்.அரசுத் தரப்பில் வாதாடிய ரோஹின்டன் நாரிமன், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. அதன் பிறகே அணு உலையில் எரிபொருள் நிரப்ப முடிவு செய்யப்பட்டது. ஆய்வுக்குழு அளித்த அனைத்து பரிந்துரைகளையும் ஒரே சமயத்தில் செயல்படுத்த முடியாது.
இப்போது தொடங்கினால்தான் இரண்டு ஆண்டுகளுக்குள் அனைத்து நடவடிக்கைளையும் செயல்படுத்த முடியும் என்றார்.பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டிலான இத்திட்டத்தைச் செயல்படுத்தும் முன்பு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு குழுக்களை அமைத்து பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்தன. தொடக்கத்தில் இத்திட்டத்துக்கு எதிராக இருந்த தமிழக அரசு பின்னர் முழு அளவில் திட்டத்தை ஏற்றுக் கொண்டது. இத்திட்டத்தில்இதுவரை எந்தப் பிரச்னையும் இல்லை. மின் தட்டுப்பாட்டைப் போக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. எனவே நல்ல நோக்கத்துடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்துக்கு தடை விதிக்கக் கூடாது என்று வாதாடினார்.
இதை ஏற்ற நீதிபதிகள், அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்புவதால் மின் உற்பத்தி தொடங்கிவிடாது என்ற மத்திய அரசின் விளக்கத்தை நீதிமன்றம் ஏற்கிறது. எனவே எரிபொருள் நிரப்பத் தடை கோரும் மனுதாரரின் வாதம் ஏற்புடையதல்ல.
அதேசமயம், மனுதாரர் தரப்பில் சுட்டிக் காட்டப்பட்ட பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவது மிகவும் அவசியம் என்பதை நீதிமன்றம் உணர்கிறது. எனவே அணு மின் நிலைய பாதுகாப்பு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வறிக்கைகள், மத்திய அணுசக்திக் குழுவின் பரிந்துரைகளின் அமலாக்கம் குறித்த ஆவணங்களை அடுத்த விசாரணை நடைபெறும் 20-ம் தேதியன்று மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக