வெள்ளி, 14 செப்டம்பர், 2012

டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வு ! உடனடியாக அமுல் !






புது தில்லி, செப். 13: டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்துவதென முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதில் மதிப்புக்கூட்டு வரி(வாட்) தனி. விலை உயர்வுக்கு முன் தில்லியில் ஒரு லிட்டர் டீசல் ரூ.41.32-க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்போது ரூ.46.95-ஆக விலை உயர்ந்துள்ளது. இதற்கு முன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது 
குறிப்பிடத்தக்கது.


பெட்ரோல் விலை ஏறவில்லை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6 வரை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், லிட்டருக்கு ரூ.14.78-ஆக இருந்த கலால் வரியில் இருந்து ரூ.5.50-ஐ அரசு குறைத்துள்ளதால் பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை. அதேபோல் மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையும் உயர்த்தப்படவில்லை. மானிய சிலிண்டர் எண்ணிக்கை குறைப்பு: குடும்பத்துக்கு ஆண்டொன்றுக்கு மானிய விலையில் வழங்கப்படும் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் எண்ணிக்கை 6- ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

 6 சிலிண்டர்களுக்கு மேல் தேவைப்படுபவர்கள் சந்தைவிலையில் தான் இனி பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை.நடப்பு நிதியாண்டில் எஞ்சியுள்ள மாதங்களுக்கு 3 சிலிண்டர்கள் வரை மானிய விலையில் பெற முடியும். வீட்டு உபயோக சமையல் எரிவாயு பயன்படுத்துபவர்களில் 44 சதவீதத்தினர் 6 அல்லது அதற்கும் குறைவான சிலிண்டர்களே பயன்படுத்துவதால், அவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள். இந்த உச்சவரம்பு மூலம் மானிய விலை சிலிண்டர்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவது குறையும் என அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.டீசல் விலை உயர்வு மற்றும் மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான உச்சவரம்பு ஆகியவற்றால், எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்து வந்த இழப்பில் ரூ.20 ஆயிரத்து 300 கோடி ஈடு செய்யப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 


சென்னையில் ரூ.48.91சென்னை, செப். 13: டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டதால் சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.48.91 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை ஒரு லிட்டர் டீசல் ரூ.43.91-க்கு விற்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: