திருநெல்வேலி, செப். 11: கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 2-வது நாளாக செவ்வாய்க்கிழமையும் பதற்றம் நீடித்ததால் கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. கூடங்குளம் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக இதுவரை 51 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.இப் பகுதிகளில் மீண்டும் வன்முறை வெடிக்காமல் இருக்க வெளிமாவட்டங்களில் இருந்து கூடுதலாக ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே திங்கள்கிழமை நடைபெற்ற மோதல் பெரும் வன்முறையாக மாறியது.
போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் கூட்டத்தைக் கலைத்தனர். பதிலுக்கு போராட்டக்காரர்களும் போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர்.இச்சம்பவத்தில் போராட்டக்காரர்களும், தென் மண்டல ஐ.ஜி. ராஜேஷ்தாஸ் உள்பட போலீஸார் சிலரும் காயமடைந்தனர். இச் சம்பவத்தையடுத்து கூடங்குளம், வைராவிகிணறு, உவரி, கூத்தங்குழி உள்ளிட்ட பகுதிகளில் கலவரம் மூண்டது. போலீஸ் படையினர் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்று கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.ஊராட்சி அலுவலகம் மீண்டும் சூறை: இந்நிலையில், 2-வது நாளாக செவ்வாய்க்கிழமை இடிந்தகரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பதற்றம் நீடித்தது.கூடங்குளத்தில் உள்ள ஊராட்சி அலுவலகத்தை அதிகாலை 4 மணி அளவில் அடையாளம் தெரியாத கும்பல் சூறையாடி அங்கிருந்த பொருள்களை நாசப்படுத்தியது. இதில் அங்கிருந்த ஆவணங்கள் அனைத்தும் நாசமாயின. ஏற்கெனவே திங்கள்கிழமையும் இந்த அலுவலகம் சூறையாடப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஊராட்சித் தலைவர் சாண்டல் முத்துராஜ் போலீஸில் புகார் செய்துள்ளார்.இச்சம்பவத்தை அடுத்து திருநெல்வேலி மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதரி தலைமையிலான அதிரடிப் படை போலீஸார் கூடங்குளம் பகுதிக்குள் தேடுதல் வேட்டை நடத்தி 17 பேரை பிடித்தனர்.
கூடங்குளத்தில் சாலைகளில் போராட்டக்காரர்களால் ஏற்படுத்தப்பட்டிருந்த தடுப்புகளை போலீஸார் அப்புறப்படுத்தினர்.2 இடங்களில் உண்ணாவிரதம்: இடிந்தகரையில் லூர்துமாதா ஆலயம் முன் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் திங்கள்கிழமை மாலையில் தொடங்கிய 48 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தது. இதில் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். உண்ணாவிரதத்தை போராட்டக் குழுவைச் சேர்ந்த மை.பா.ஜேசுராஜ் வழிநடத்தினார்.இதற்கிடையே, போலீஸாரின் தாக்குதலைக் கண்டித்தும், அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தியும், தங்களுக்குச் சொந்தமான 7 படகுகளை ஒப்படைக்கக் கோரியும் உவரியில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்குத் தந்தை கிருபாகரன், ம.தி.மு.க மாவட்டப் பொருளாளர் ரைமண்ட், முன்னாள் ஊராட்சித் தலைவர் அந்தோனி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமையும் போக்குவரத்து முடங்கி இருந்தது. கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மாவட்டத்தில் உள்ள 10 கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனிடையே, இடிந்தகரைக்குச் செல்லும் அனைத்து சாலைகளிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கூடங்குளம் செல்லும் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
பல்வேறு ஊர்களிலும் போராட்டம்:
கூடங்குளத்தில் போராட்டக்காரர்களின் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்து சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ராமேசுவரம், பாம்பனில் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
போராட்டம் தொடரும்
"நான் கைதான பின்னரும் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் தொடரும்' என போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார் கூறினார்.தப்பிச் சென்றதாக கூறப்பட்ட உதயகுமார் செவ்வாய்க்கிழமை மாலை இடிந்தகரைக்கு வந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் உதயகுமார் கூறியதாவது:நாங்கள் யாரையும் கொலை செய்யவில்லை; கொள்ளையடிக்கவில்லை. காந்திய வழியில் போராடினோம்.போராட்டத்தில் பங்கேற்ற பெண்களையும் குழந்தைகளையும் போலீஸார் கொடூரமாகத் தாக்கினார்கள். அணுமின் நிலைய முற்றுகைக்குச் சென்ற மக்கள் நிராயுதபாணியாகத்தான் சென்றனர். காவல் துறையினர்தான் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர்.நாங்கள் கைதான பின்னரும் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக தமிழக அளவில் போராட்டம் தொடரும் என்றார் உதயகுமார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக